பக்கம்:அலைகள் ஓய்வதில்லை-லா. ச. ராமாமிர்தம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



130 ❖ லா. ச. ராமாமிர்தம்


“புரியறதுக்கு ஒண்ணுமில்லேம்மா. அவர் பொறுமை கடலினும் பெரிது. கோபம் கடல் பற்றி எரியும்போல், நான் போகணும்.”

அகிலாவுக்குப் பயத்தில் உடல் சிலிர்த்தது.

“நீ வந்த அதிசயம் என்ன, போற சுருக்கு என்ன? ரெண்டுமே எனக்கு அப்பாற்பட்டது. சரி வா. பின்னி விடறேன்.” இதுமாதிரி சடையைப் பின்ன எத்தனையோ கொடுத்து வெச்சிருக்கணும். இது கூந்தலா, காட்டாறா, பின்னப் பின்னச் சோம்பிக்கொண்டே தடுமனாய்ப் பாம்பு நீண்டது.

“கமலா, என் பட்டுப் புடவையிலேயே அவரிடம் போ, என் நினைவாயிருக்கட்டும்.”

“ஐயையோ அதெல்லாம் வேண்டாம். எப்படி வந்தேனோ அப்படித்தான் போகணும். அவர் அப்படி”

இப்படியும் ஒரு புருஷன். அவன்மேல் இவளுக்கு இத்தனை மோகம்! ஒண்ணும் புரியல்லே. “சரி வா, போகலாம்.”

“நீங்கள் வேண்டாம், எப்படிப் போனேனோ அப்படிப் போயிடறேன். அப்பா வேணும்னா கோவில் வரை வரட்டும். அவர் சுவாமி சன்னதியில் இருப்பார்.”

அகிலா அவர்களைப் பார்த்துக்கொண்டே நின்றாள். தானே தன்னை விட்டுப்போவது போலிருந்தது.

அப்பாவும் மகளும் இடைவழியில் பேசவில்லை. குருக்கள் நெஞ்சில் ஏதேதோ குழுமிற்று. சொல்லவில்லை.

த்வஜஸ்தம்பத்தண்டை அவரைக் கையமர்த்தினாள். “போயிட்டு வரேனப்பா...”

உள் ப்ரகாரத்துள் ஆவலுடன் ஓடினாள்.