பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

அவமானமா? அஞ்சாதே!



தேர் சரியான பாதையில் சென்று, சரியான பாதையில் ஆலயத்தின் முன்னே போய் நிற்கத்தான் அவர்களது செயல் உதவுகிறது.

அதுபோலத்தான் நமது எதிரிகள் என்பவர்கள். நமக்கு முட்டுக்கட்டைப் போடுகிறார்கள். இங்கே முட்டுக்கட்டை என்பது நமக்கு அவர்கள் ஏற்படுத்துகிற அவமானங்கள்.

அவர்கள் நமக்கு இழைக்கிற அவமானங்களை, நாம் சரியான உணர்வோடு ஏற்றுக்கொண்டால், சங்கடங்கள் ஏற்படாது. சஞ்சலங்கள் தோன்றாது. அவை சரியான சந்தர்ப்பங்களாக மாறி நமக்கு உதவிகளாக அமைந்துவிடும்.

பிறர் நமக்கு இழைக்கின்ற அவமானங்களை கொஞ்சம் புத்தசாலித்தனமாக ஏற்றுக்கொண்டால், அதாவது கோபப்படாமல், குமுறிவிடாமல், கொந்தளித்துப் போகாமல், கூனிக்குறுகிவிடாமல், கொஞ்சம் நிதானத்தோடு, அவமானங்களை ஏற்றுக்கொண்டால், என்ன ஆகும்? எரியும் தீபத்திற்கு தூண்டுகோல் போல் ஆகிவிடும்.

அதற்கு பெரிய தந்திர மந்திரம் எதுவும் தேவையில்லை. கொஞ்சம் பக்குவப்பட்டுக்கொண்டால் போதும்.

வயலில் பயிரைவிட, புல் பூண்டு போன்ற களைகள்தான் வேகமாக, அதிகமாக வளர்கின்றன. அதுபோலத்தான் உலக வாழ்க்கையிலும் நல்லதைவிட கெடுதல் செய்பவர்கள்தான் அதிகமாக உருவாகின்றார்கள். கேடுகளை செய்கின்றார்கள். கெடுதல்களும் களைகளும் தினந்தினம் களையப்படுவதாக பேசிக் கொள்வார்கள். இரண்டையும் பிடுங்க முடியும். ஆனால் அழிக்க முடியாது.