பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

அவமானமா? அஞ்சாதே!



இவனிடம் மட்டும் ஒரு மூத்த சகோதரனைப் போல அன்பு காட்டத் தொடங்கினார். அவனை அந்தக் கல்லூரியின் செல்லப் பிள்ளையைப் போல நடத்தினார். இன்று வரை எனது இனிய நண்பர் அவர் எந்நாளும் எனக்கு உயர்வைக் காட்டிய உன்னதத் தலைவர்.

அந்த அவன் தான் நான்.

இது ஒரு சாதாரண நிகழ்ச்சியாக இருக்கலாம். எனக்கு நேர்ந்த சிறிய பாதிப்பாகக் கூட இருக்கலாம். இது ஒரு பெரிய அவமானமா என்று கூட நீங்கள் கேட்கலாம்.

ஆனால் இந்நிகழ்ச்சி ஒரு நம்பிக்கையான மனதில் நடுவிலே குத்திய காரமுள். மனித உணர்வின் முடியைப் பிடித்து அறுத்து வீசிய ஒரு அவல சம்பவம் என்றே நான் நம்பினேன்.

நான் எதைக் கேட்டுச் சென்றேனோ, யாரிடம் போய் நின்றேனோ அவமானத்தைத்தின்றேனோ, அதையே நான் பெற்றாக வேண்டும் என்று இலட்சியத்துடன் என் இளமைக் கால கல்லூரி வாழ்க்கை முழுவதையும், விளையாட்டுப் பயிற்சிகளிலே கழித்தேன். அந்த என் முயற்சி என்னை பாழடித்து விடவில்லை.

கல்லூரியில் இயக்குநர்கூட இருந்தே, அவர் செய்கின்ற அத்தனைக் காரியங்களையும் நான் செய்தேன். கற்றுக் கொண்டேன். அந்த அவமானகரமான நிகழ்ச்சிதான் என்னை விளையாட்டுக்களில் ஆழ்ந்து பயில, தேர்ந்து திகழ ஊக்கம் தந்து, உற்சாகப்படுத்தியது. அந்த அறிவான அனுபவங்கள் தான் எல்லா விளையாட்டுக்கள் பற்றியும் எழுதுகின்ற துணிவையும், அறிவையும் அளித்தன.

யாராவது உங்களைப் பார்த்து உனக்கு என்ன தெரியும் என்று ஏளனமாகக் கேட்டால் கிண்டலாகக் குத்திக் காட்டினால், ஏமாற்றமளித்தால், எரிச்சல் உண்டாக்கினால் கோபப்படாதீர்கள்.