பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

75



6. முற்காலம் : (முன் + காலம்)

வாழ்க்கைப் போராட்டத்தில் வளமையை இழந்தவர்கள். இளமையைத் தொலைத்தவர்கள். இன்பத்தைத் தேடி அலுத்தவர்கள். எதிர்பாராத நிகழ்ச்சிகளால், விபத்துக்களால் தடம்மாறி சலித்தவர்கள், மனம் புண்ணாக்கி உடல் சல்லடைக் கண்ணாகிவிடுகின்ற காலம் இது.

வடிவிழந்து போகின்ற உறுப்புக்கள். வனப்பிழந்து மாறுகின்ற அங்கங்கள், வறுமை வற்றிப் போய் கிடக்கும் அவயங்களை நோய்கள் நொறுக்கிவிட, மன இறுக்கமும், உடல் கிறக்கமும் பெற்றிருக்கும் பலப்பல உடல்வாதைகள். பார்வையிழக்கின்ற கண்கள். பலமிழந்து ஆடுகிற பற்கள். கேட்க மறுக்கும் காதுகள். இயல்பான ஓட்டத்தை இழக்கும் இதயம். இப்படியெல்லாம் பலப்பல விதங்களில் உடல் கிழத்தன்மை ஏற்பட, முள்காலத்தை நோக்கி (முள் + காலம்) எண்ணங்கள் நெருப்பாக நினைக்க, வாழ்க்கையுடன் வாதாடுகின்ற காலம் முன்னர் குழந்தையாக வாழ்ந்தபோது இருந்த அறிவு நிலை உணர்வு நிலைக்கு உள்ளாகும் காலம் (50 முதல் 70 வரை).

7. வற்காலம்: (வன் + காலம்)

அதாவது வறண்ட காலம். திரட்சியுடன் தேஜசாக இருந்த தேகத்தில் வறட்சி. திண்மையை உறுதியைக் காட்டிய மனதில் மிரட்சி எண்ணங்களுக்கிடையே பய உணர்ச்சி. இறப்பு எப்போதும் ஏற்பட்டு விடும் என்று கிளர்ச்சிகள் கொடுக்கிற தளர்ச்சி.

உடலிலே குறைகள் மனதிலே கவலைகள் சுற்றுப்புற சூழல்களில் தொல்லைகள் குடும்பத்திலே சுமைகள், பிறருக்குப் பயன்படாததால் மற்றவர்களிடம் பிறக்கும் ஏச்சுக்கள், பேச்சுக்கள்.