பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

அவமானமா? அஞ்சாதே!


பிரதாப புலம்பல்களை செய்து நடிப்போர் உலகத்தில் ஏராளம்! ஏராளம்.

எனக்கு அவமானமா! நான் அந்த ஏரியாவிலேயே தலைகாட்ட மாட்டேன்! எங்கேயாவது ஓடிப்போய் விடுவேன் என்று, மானப்பிரச்சனைக்கு வானளாவிய எல்லையைக் காட்டிப் பேசி, தலையணைக்குள் தலையை புதைத்துக் கொள்வோர் ஏராளம் ஏராளம்

அவமானப்பட்டுக் கொண்டு, ஒருவர் உலகில் வாழ்வதைவிட, பட்டினி கிடந்து சாவதே மேல் என்று, சாப்பாட்டுப் பிரச்சினைக்குள் சரித்திரம் பேசுவோரும் ஏராளம்.

உண்மையில் அவமானம் என்பது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றுதான். போற்றிப்பாராட்ட முடியாத ஒன்றுதான்.

என்றாலும், வருகிற அவமானத்தை, வாரி மடியில் கட்டிக் கொள்ளாமற் போனாலும், வந்ததை வரவேற்றுவிட வேண்டியதுதான். வேறு வழியில்லை. வழியேயில்லை.

ஒரு அவமானத்தை, மனமார ஏற்றபடி ஏற்றுக் கொள்வது எப்படி? என்றுதானே நீங்கள் கேட்கிறீர்கள்?

அது சுலபம். ரொம்ப சுலபம்.

சுலபமா! என்ன சார் கேலி செய்கிறீர்களா எதையாவது எழுதியாக வேண்டும் என்பதற்காக புதிர் போடுகின்றீர்களா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

என்றாலும் நெருப்பு என்றால் வாய் வெந்துவிடுமா சர்க்கரை என்றதும் நாக்கு இனித்துக் கொள்ளுமா! என்ன!

அதுபோலத்தான் அவமானமும்!

அவமானம் என்று நமக்கு வருகிறபோது, சந்தர்ப்ப சூழ்நிலைகள் நம்மைத் தாக்குகிறபோது, வீரனாக இருந்து ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் எப்படி?