பக்கம்:அவள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116. லா. ச. ராமாமிருதம்


எதற்கும் ஒரு பதிலில் அம்மா கில்லேடி.

திடுதிப்புனு அப்பா போயிட்டாரே ஒழிய யாரையும் நடுத்தெருவில் நிறுத்திவிட்டுப் போகவில்லை. உயிலே எழுதி விட்டுப் போயிருந்தார். அவர் வழியில், ஆயுசு கட்டை எனும் முன்யோசனையோ என்னவோ? என் தாய் வழியில் ஆயிரம் பிறை பார்த்தவர்கள் இன்னும் இரண்டு மூன்றுபேர்கள் இன்றும் பல் கெட்டியாக இருக்கிறார்கள். ஆகையால், என் அம்மாவுக்கு ஜீன்ஸ் ப்ரகாரம் ஆயுசு கெட்டிதான்.

அப்பா எதையுமே திட்டம் போட்டுச் செய்வார். அது அவருக்குப் பிடிக்கும். அவருடைய சுபாவம். ஆபிசிலும் அவர் மேஜை சுத்தம். ஆபீஸ் சாவிகள், ஆபீசிக்கு ரிஜிஸ்தர் தபாலில் அவர் காணாமல் போன அன்றே வந்து சேர்ந்ததாகப் பின்னால் அறிந்தோம்.

அப்படி ஒன்றும் குறைகூறும்படியும் வைத்துவிட்டுப் போகவில்லை. அப்பா, கைராசிக்காரர், பொன்னன் - அப்பவே கணிசமாகச் சேர்த்து வைத்திருந்தார்.

அப்பா, அப்படி ஒன்றும் முன்கோபியுமல்ல. யாருடனும் அதிகம் பேசமாட்ட்ார். அம்மா நேர் எதிர். பேசிப் பேசியே அரித்து எடுத்துவிடுவாள். அவளை அப்பா எப்படி அதுவரையே சகித்துக்கொண்டிருந்தார் என்பது நாளாக ஆகப் பெருகிக்கொண்டேயிருக்கும் கேள்விக்குறி. எட்டத்துப் பார்வையில்தான் விளிம்புக் கோடுகள் வெளிப்படுகின்றன. நாளாக ஆக அப்பாவைப் பற்றி நினைக்கையில், அதுவும் ஏனோ தெரியவில்லை ஒரு வாரமா அடிக்கடி நினைப்பில் வருகிறார்; ஏதோ மலைத் தொடரைப் பார்க்கிற மாதிரியிருக்கிறது. மலைத்தொடர் வளர்ந்துகொண்டே போகிறது. தொடரின் முடிவு எங்கே? தொடரின் மறுபக்கம் என்ன இருக்கும்? நீங்கள் எனக்குச் சொல்வீர்களா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/160&oldid=1497056" இலிருந்து மீள்விக்கப்பட்டது