பக்கம்:அவள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாக்ஷாயணி 167

ஆமாம், எல்லாமே உங்களுக்கு அப்புறந்தான். இது விஷயத்தில் அன்று எப்படியோ அப்படித்தான் எனக்கு இன்றும். நான் இருக்கும்வரை அப்படித்தான்.'

அவள் ஆவேசத்தைக் கண்டு அதிசயித்து நின்றான். மாலை இரவுள் கடக்கும் நேரத்தில், கோயில் மணியோசை காற்றில் மிதந்து வந்து கலக்கையில் அவள் வெறிபிடித்தாற் போல் பேசுவதைக் காணச் சற்று அச்சமாய்க் கூட இருந்தது.

***

பழுக்கக் காய்ந்த வெல்லப்பாகை யாரோ வாயில் ஊற்றினாற்போல் கனவு கண்டு திடுக்கென விழித்துக் கொண்டாள். அறைக்கு வெளியே நிலவு பட்டை வீசிற்று, அவள் கணவன் படுக்கை விரித்தபடி கிடந்தது. நினைவைச் சரிகூட்டிக் கொள்ளுமுன் உருகோசை புரண்டு வந்து மேலே மோதிற்று. அவளுக்குத் திக்கென்றது, பரபரவென எழுந்து வெளியே வந்தாள்.

பூந்தொட்டிகள் சூழ்ந்த கல்மேடைமேல் அவன் உட்கார்ந்திருந்தான். மடியில் பாபு தலைவைத்துக் கவர்ச்சியான அலங்கோலத்தில் தூங்கிக் கொண்டிருந்தான். பசுபதி ஒரு கையால் தம்பூரை இறுகத் தழுவிக் கொண்டிருந்தான்.

அவள் அவனிடமிருந்து தம்பூரைப் பிடுங்கிக்கொள்ள முயன்றாள். வேண்டாம்...” 'இல்லை, நான் பாடவில்லை. வெறுமெனச் சுருதி மாத்திரம் மீட்டிக்கொண்டிருக்கிறேன்.” 'அதற்கும் நேரமாகவில்லையா?” அவன் வெறுமெனச் 'சூள்' கொட்டினான். அவள் எதிரே அமர்ந்தாள். காற்று சில்லென வெட்டிற்று. உடம்பைச் சிலிர்த்து ஒடுக்கிக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/211&oldid=1496365" இலிருந்து மீள்விக்கப்பட்டது