பக்கம்:அவள்.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கமலி 361

சிரித்தாள். பற்களில் நக்ஷத்ரங்கள் மின்னின. அகிலா கண்ணைக் கசக்கிக்கொண்டாள். ஒண்னுமில்லியே!

அவள் வாயில் கவளத்தைப் போட்டதும் அகிலா ஒரு அசாத்ய பரவசத்தில் ஆழ்ந்தாள். திடீரெனச் சுரப்பில் தன் ரவிக்கை நனைந்ததை உணர்ந்தாள். அவளுக்கு அது ஆச்சர்யமில்லை. ஊட்டக் கேட்டது ஆச்சர்யம் இல்லை. எதுவுமே ஆச்சர்யமில்லை. ஒரே அன்பு வெள்ளத்தில் மூழ்கிப்போனாள்.

இப்ப நான் உங்களுக்கு ஊட்டறேன், “அ...ஆ.. அப்பா, வாயைத் திறவுங்கோ...'

ஆ, மதுரமே! ஒரே கலம். எச்சில், தீண்டல், ஆசாரம், பூஜை, புனஸ்காரம் என்ன வேண்டிக்கிடக்கு? எல்லாமே ஒரே அன்பு வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போயின.

முதன் முத்தத்தின் எச்சிலில் ஆரம்பித்து
உயிர் முத்து வைத்த வித்திலிருந்து கடைசியில்
கடைவாயில் வழியும் எச்சில்வரை
தலைமுறை தலைமுறை எச்சில்
இல்லாவிடில்
இப்புவனமே ஏது?

வந்தவள் சொன்னாளா? நெஞ்சில் தானே தோன்றியதா? ஒரே ஆனந்த மூர்ச்சையில் எந்நேரம் மூழ்கியிருந்தனரோ?

தோட்டத்தில் கிணற்றடியில் பலா மரத்தில், கூட்டில், இரையைத் தாங்கிவரும் தாயைக் கண்டு குஞ்சுகள் ஆர்ப்பரிக்கின்றன.

தூரக் காட்டில் தேன் குருவி பகுசொகுசில் பூவுக்குப் பூ அந்தரத்தில் நின்று தேனை உறிஞ்சுகிறது.

மேகங்களற்ற நிர்ச்சலமான நீலத்தில் வெள்ளித் தாம்பாளம் கண் கூச தகதகக்கிறது. இல்லை, இது அவள் அபய கரத்தில் ஜ்வலிக்கும் மோதிரத்தின் முகப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/405&oldid=1497226" இலிருந்து மீள்விக்கப்பட்டது