பக்கம்:அவள் ஒரு எக்ஸ்ட்ரா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

பிறகு முக்கிய பாத்திரமாகத் தோன்றலாம். பணமும் புகழும் ஏராளமாகக் கிடைக்கலாம். வசதியாக வாழலாம், இபபொழுது பட்ட... கஷ்டங்களை யெல்லாம் மறந்து விடலாம் என்று நம்பினாள்.

முதல் நாள் -- அவளைப் படக் கம்பெனியில் சேர்த்து விட்ட அன்று----இரவில், கறுப்பசாமி சிரித்துச் சிரித்து பேசி அவளை வளைய வந்தான், அவன் போக்கு அவளுக்குப் பிடிக்கவில்லை இருந்தாலும் என்ன செய்வது ? உதவி செய்தவன், அவன் வீட்டில் தங்கியிருக்கிறாள், சீறி விழ முடியுமா? சிரிக்கத்தான் வேண்டும். அவன் தன் ஆசையை அறிவித்தான். அவளுக்குப் பகீரென்றது. இப்படியும் நடக்கும்மென அவள் எதிர்பார்க்கவில்லை. அவள் கோபம் காட்டினாள். 'என்னடி பத்தினித் தனம்' பண்றே! மதுரையிலே நீ டிக்கெட்டுப் போட்டுக் கிட்டிருந்திருப்பே, தெரியாதாக்கும். உன்னை கூட்டி வந்து உதவி செய்தது எதற்கு ? பணம் வந்ததும் நீ தரப்போகிற கமிஷனுக்கு மட்டும்தான்னு நினைச்சியா? ஹ ஹ ஹ என்று 'வில்லன்' சிரிப்பும் பார்வையும் சிதறினான். அவள் என்ன செய்ய முடியும் ? அவன் ஆசை காட்டினான், தன்னால் பெரிய பெரிய சான்ஸ்கள் எல்லாம் பிடித்துத் தர முடியும் என்றான், அவளுக்கு ஆசை யிருந்தது சினிமா நட்சத்திரம் ஆக வேண்டு மென்று, ஆகவே அவனிடம் அவள் தன்னையே கொடுத்து விட வேண்டியதாயிறு.

முதலில், படத்தில் சும்மா தோழியாக வந்து போவது தான் என்றறிந்ததும் அவளுக்கு ரொம்ப ஏமாற்றமாக இருந்தது. ஹீரோயின் பார்ட் அவள் எதிர்பார்க்கவில்லை தான் என்றாலும் இவ்வளவு அநாமதேயமான ஒரு வேஷம் தானா என்று நினைக்கவும், கண்ணீர் வடித்தாள் அவள். அவனிடம் சொன்ன போது, அவன் தனது 'டிரேட் மார்க்' சிரிப்பையே உகுத்தான். பின்னே என்ன ஹீரோயினி ஆக்ட்டு கிடைக்கும்னு நினைச்சியா.? என்று கிண்டல் செய்தான்.