பக்கம்:அவள் ஒரு எக்ஸ்ட்ரா.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அவள் ஒரு எக்ஸ்ட்ரா !
1

 அவளை நான் அதற்கு முன்பு பார்த்ததே கிடையாது.

திடீரென்று, எதிர்பாராத விதமாக வந்து சேர்ந்தாள் அவள். பத்திரிகை ஆபீஸைத் தேடி பொதுவாக அலங்காரிகள் வருவதில்லை. தப்பித் தவறி யாராவது வந்துவிட்டார்கள் என்றால், அவர்கள் ‘அகதி’கள் என்று சொல்லிக் கொண்டு அகப்பட்டதைப் பற்றிச் செல்ல வரும் இனத்தினராகவே இருப்பார்கள்.

முதலில் அவளையும் அப்படித்தான் எண்ணினேன். ‘அகதி’கள்தான் பெருத்துக் கொண்டு வருகிறார்களே இந்த நாட்டிலே! அகதிக் குடும்பங்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் சிலசமயம் அணிந்திருக்கிற ஆடைகளையும், அவர்கள் மேனி மினுமினுப்பையும் பார்க்கும்போது ‘இவர்கள் எல்லாம் அகதிகள்தானா? அப்படியென்றால் நான் கூட அகதி என்று சீட்டு எழுதிக் கொண்டு கிளம்ப வேண்டியதுதான். பகவதி பிஷாந்தேஹிப் பிழைப்பிலாவது நல்ல காசு கிடைக்கும் போல் தோன்றுகிறது. இந்த எழுதிப் பிழைக்கும் வேலையில் ஒரு மண்ணும் கிடைப்பதில்லை’ என்று நினைப்பதுண்டு... உம், அது வேற விஷயம்!