பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18

பக்கத்து அறையில் அறிஞர் அண்ணா அவர்களின் நெருங்கிய நண்பர் "தையற்கலை சுந்தரம்" என்பவர் தங்கி இருந்தார்.

அண்ணா அவர்கள் எப்போது ஓய்வு கிடைத்தாலும் புரசவாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வீட்டிற்கு வருவார்கள். படம் பார்க்க திரு. சுந்தரம், பேராசிரியர், அண்ணா மூவரும் சேர்ந்தே செல்வது வழக்கம். அப்படி ஒரு நாள் "உமா" தியேட்டரில் "கனவு" என்னும் படத்தைப் பார்த்து இருக்கிறார்கள். பாடல்கள் முழுவதும் நான் எழுதியவை. இசை அமைப்பு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் என்று எல்லோரும் அழைக்கக் கூடிய மலையாள தட்சிணாமூர்த்தி அய்யர் அவர்கள். அதில் வரும் ஒரு பாடலில்,

"திருநாடு தன்னில் திருவோடு ஏந்தி
தெருவோடு போகும் நிலைமாறிடாது
சீமான்கள் உள்ளம் மாறாதபோது"

என்ற வரிகள் அண்ணாவை மிகவும் கவர்ந்துள்ளன. படம் பார்த்து வந்தவுடன், சுந்தரம் அவர்கள் மூலம், அண்ணா என்னை அழைத்துப் பாராட்டிய விதத்தை நினைத்து, இன்றும் நான் மகிழ்கிறேன். அது மட்டுமல்ல, என்னுடைய கிராமியப் பாடல்களில் அவர் எவ்வளவு ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதற்கு S.S.R. "தங்கரத்தினம்" படத்தில் வரும், "இன்னொருவர் தயவெதற்கு, இந்நாட்டில் வாழ்வதற்கு? இல்லையென்ற குறையும் இங்கே, இனிமேலும் ஏன் நமக்கு?" என்ற பாடல் உதாரணம். மேற்கண்ட இரண்டு வரிகளை வைத்துக் கொண்டு, "திராவிடநாடு" பத்திரிகையில் சுமார் 5 பக்கங்கள் அண்ணா எழுதிய கட்டுரையை, அவர் எனக்குக் கொடுத்த நற்சான்றிதழாக நினைக்கிறேன்.

1956-ம் ஆண்டு A. P. N, அவர்களுடைய லட்சுமி பிக்சர்ஸில் "மக்களைப் பெற்ற மகராசி" என்பது முதல் படம். அதில் பல ஊர்களின் பெயரை வைத்து ஒரு பாடல்.