பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

X கொள்கிறார்கள். இதனால்தான் முதல்வர் கலைஞர் அவர்கள் தீ மிதிப்பது காட்டுமிராண்டித் தனம் என்று குறிப்பிட்டார். உடனே, மதவாதிகள் வெகுண்டெழுந்ததை அறிவோம். இவர்களுக்கு இந்த மக்கள் ஆன்மீகத் தளத்தின் மேலெழாமல் அப்படியே அடிமண்டியாக கிடக்கவேண்டும் என்கிற ஆசை. இவர்களின் இந்த ஆசையை நிராசையாக்க வேண்டியது நமது கடமை. நமது மக்களை இத்தகைய பக்தி வெளிப்பாடுகளான பைத்தியக்காரத் தனங்களில் இருந்து விடுவித்தாக வேண்டும். இதற்காகத்தான் வள்ளலார் மக்கள் நேயப் பேரவை என்ற ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறோம். இது வளர்ந்து வளர்ந்து மக்கள் மத்தியில் செயல்படுவதற்கு வாசகர்கள் வாய்ச்சொல் அருள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தொகுப்பு சிறப்பாக வந்திருந்தால் அதற்கு தோழர்கள் அகத்தியலிங்கமும், திலீப்குமாரும் பொறுப்பாவார்கள். தவறாக வந்திருந்தால் அதற்குப் பொறுப்பு நான்; நான் மட்டுமே. இந்தத் தொகுப்புக்கு சிறப்பான முகப்போவியம் வரைந்த ஒவியர் ஜமாலுக்கும், இதை செம்மையாக அச்சிட்டுக் கொடுத்த பதிப்புச் செம்மல் முனைவர் சா. மெய்யப்பன் அவர்களுக்கும், அவரது பதிப்பகத்தின் நிர்வாகிகளான திருவாளர்கள் சோமு, குருமூர்த்தி உள்ளிட்ட தோழர்களுக்கும், என்னை விடாமல் நிலைநிறுத்தும் வாசகப் பெருமக்களுக்கும் என் நன்றி உரித்தாகும். தோழமையுடன், சு. சமுத்திரம்