பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

| A கண் முன்னாலேயே அதேசமயம் அவர் எடுக்கச் சொன்ன மூன்று கதைகளில் ஒன்றான ரசவாதம் என்கிற கதையை மட்டும் எடுக்கவில்லை. காரணம் ஒரு காலம்வரை, செம்பு உலோகத்தை தங்கமாக, மாற்றுவதை, சித்தர் பாணியில் ரசவாதம் என்பார்கள். எனக்குத் தெரிந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இதே சென்னையில் ஒருவர் செம்புக் கட்டியை, தங்கக் கட்டியாக மாற்றுவதற்கு சாமியார் சாமியாராக அலைந்து, இறுதியில் மனநோய்க்கு ஆளானார். பல சித்த நூல்களை ஒரளவு படித்த எனக்கு ரசவாதம் என்பது, ராமர் பிள்ளையின் மூலிகைப் பெட்ரோல் போன்றது. திரவப் பொருளான பாதரசத்தின் மீது ஒரு மூலிகைச் சாரை ஊற்றி அதை மணியாக்கி காட்டியதையும் கண்டிருக்கிறேன். "ஆடுகின்ற அரவுமீது ஒடு ரசம் வார்த்து" என்ற ஒரு வரியை ஒரு நவீன சித்தர் என்னிடம் பாடிக் காட்டினார். பொருள் கேட்டபோது, போடா "பொ” என்றார். அன்று காளியம்மா சாமியாடி ஆட்டுக்கடாய் ரத்தத்தை குடிப்பதை பக்திப் பரவசத்தோடு பார்த்த நான், இன்றோ எல்லாவற்றிற்கும் மூலமாக வள்ளலார் சொல்லும் அருட்பெருஞ்ஜோதி - அதாவது இந்த பிரபஞ்சத்தையே ஆராதிக்கும் கட்டத்திற்கு வந்திருக்கிறேன். நாளை, எந்த கட்டத்திற்குப் போகப் போகிறேனோ? காரணம், ஆன்மீகத் தேடல்களும், விஞ்ஞான மெய்ப்பாடுகளை சார்ந்தே நிற்கின்றன. அதே சமயம் மக்களா? கடவுளா? என்ற கட்டாயம் ஏற்பட்டால் நான் மக்கள் பக்கம். என்றாலும் கடவுள் என்ற தத்துவத்திற்கும், வேர்வை சிந்தும் அப்பாவி பாட்டாளி வர்க்கத்திற்கும் எந்த மாறுபாடும் இல்லை என்றே கருதுகிறேன். இந்தத் தொகுப்பில் வராத ஒரு கருத்தையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறன். மேட்டுக்குடி, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை ஆடு, கோழி பலியிடுதல், சாமியாடுதல், தீ மிதித்தல் போன்ற பாமரச் செயல்களில் வரலாற்று ரீதியாக ஒரு வித வஞ்சனையோடு ஈடுபடுத்தி இருக்கிறது. கோவில்களில் ஆடு, கோழி, பன்றி முதலியவற்றை வெட்டி கிராமத்துத் தேவதைகளுக்கு, ரத்தமும்-சோறுமாக படைக்கும் இந்த வகை மக்கள், சண்டை என்று வந்தாலும் தங்களுக்குள்ளே ஒருவரை ஒருவர் ஆடு, கோழி, பன்றியை வெட்டுவது போல வெட்டிக்