பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னையை மறைத்த சிலை கருவறைச் சுவரின் புறப்பகுதியில் எழுந்த துர்க்கையம்மன் சிலையை, ஏகாம்பரம், அன்று வித்தியாசமாகத்தான் பார்த்தார். அவர் கண்களுக்கு, பல்லாண்டு பல்லாண்டாய் சிலையை மறைத்தவள் அந்த மாதா. இப்போதோ அந்த மாதாவை, சிலை மறைத்தது. எந்தத் திசையில் நின்றாலும், அந்தத் திசைநோக்கி அருட்பாவை வீசுவதுபோன்ற அம்மனின் எண்திசைப் பார்வை, இப்போது முகமறியா ஒரு சிற்பியின் கைத்திறனாய் தோன்றியது. ஆணயோ, பெண்ணையோ, உறுப்புக்களை உள்வாங்காமல் மானுடக்கூறாகப் பார்க்கும் மாமனிதப் பார்வைபோல், கற்சிலை என்ற எண்ணமற்று, மானுடத்தைப் பெற்றெடுத்து, அதைப் பிறப்பெடுக்கவும் வைத்த பெருந்தாயாய் தோன்றிய எதிர்ப்பக்கம், இப்போது அவருக்கு ஆய்வுக்குரியதாய்ஆகிப்போனது. இந்தச் சிலை எந்த நூற்றாண்டில் செய்யப்பட்டிருக்கும்? கருங்கல்லா. மாவுக்கல்லா. கவர்க்கல்லில் வடிக்கப்பட்டதா அல்லது பொருத்தப் பட்டதா. முற்சேர்க்கையா. பிற்சேர்க்கையா. துர்க்கை என்றால், பன்னிரெண்டு வயதுச் சிறுமி என்று கதையளப்பார்களே. அந்தக் கதைப்படி இந்தச் சிலையில் அந்த வயது பிரதிபலிக்கிறதா. ஏகாம்பரம், அந்தச் சிலையை புதிதாய் பார்ப்பதுபோல பார்த்தார். புதுமையாய்ப் பார்த்தார். ஒரு பெண்ணை,