பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 1.21 ஒரு நல்ல நாளில் குத்துவிளக்கு சாட்சியாக குருநாதர் இவருக்கு ஞானப்பயிசிகளை போதித்தார். கூடவே சில சித்துகளையும் செய்துகாட்டினார். இந்த ஏகாம்பரமும் இவற்றைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டார். இப்போது ஏகாம்பரம் எதிர்ப்பக்கம் கண்ணில்பட்ட அம்மனை பார்த்து விட்டு வேகவேகமாக கண்மூடினார். குருநாதரை மனதுக்குள் தியானித்தார். குருநாதர், அண்மையில்தான் அகால மரணம் அடைந்தார். அந்த மரணமே இவரை அவருள் உயிர்ப்பித்தது. அவருக்கு அஞ்சலி செலுத்துவது, அவரது பயிற்சிகளை அப்பியாசம் செய்து செய்து அவரைப்போல் ஒரு சித்தர் ஆவதுதான். ஏகாம்பரம், குருநாதர் கற்றுக் கொடுத்தது போல், உச்சந்தலையின் உட்பக்கத்தில் இருந்து பிட்டத்தின் அடிவாரம் வரை மானசீகமாக இரண்டு நேர்கோடுகளை போட்டுக்கொண்டார். மூன்றங்குல இடைவெளி கொண்ட ஒளிக்கோடுகள். கல்லூரிக்காலத்தில் கையாண்ட சோதனைக் குழாய் வடிவம் இந்தக்கோடுகளின், அடிவாரத்தை பிட்டத்து அடிவாரம் இட்டுநிரப்பியது. இதனை குருநாதர் பிரக்ஞை என்றார். ஆனாலும் மனம் கேட்டது. பிரக்ஞை என்றால் என்ன? குருநாதர் ஒளிவிளக்குச் காட்சியாய், இதனை விளக்கிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அவர் வெளியேபோக வேண்டியது வந்துவிட்டது. அதற்குமேல் அவரைப் பார்க்க வாய்ப்பில்லை. வந்துவிட்டார். எனவே ஏகாம்பரமே பிரக்ஞை பற்றி சொந்தமாக ஒரு அனுமானத்திற்கு வரவேண்டியதாயிற்று. படித்தவவை அனைத்தையும் நினைத்துப் பார்த்தார். பிரக்ஞை என்பது, இருக்கிறேன், இருக்கிறார்கள், இருக்கின்றன என்ற பிரபஞ்ச உணர்வா? அல்லது இவையில்லை, அவையில்லை என்று தோற்ற மாயையை தூக்கி எறிவதா? சைவத்தில் கூறப்படும், பசுபதிபாச-மறுமை எதிர்பார்ப்பா. அல்லது வைணவம் விளக்கும் அவன் அவள் அது என்ற இம்மை உணர்வா?