பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 141 'நான் கேட்கேமில்ல? ஆபீஸ் பிரச்னையை என் கிட்டே சொன்னால் நானும் ஒரு யோசனை சொல்வேனே. சொல்லி இருக்கேனே." பொன்னம்பலம், மனைவியின் கண்களை நேருக்கு நேராய் பார்த்தார். பின்னர் அந்த நேர்பார்வையை, அவளின் பாதாதி கேசம் முதல், செங்குத்தாயும் குறுக்கும் நெடுக்குமாயும் படரவிட்டார். ஒருகாலத்தில், அத்தனை சாமுத்திரிகா லட்சணங்களையும் கொண்டவளாய், கண்களை ஏற்ற இறக்கமாய் நிலைநாட்டி, தன்னை கிறக்கமாய் பார்த்து, கிறக்கடித்தவள். வாலைப் பருவத்தின் வாளிப்புடன், அவளது பல்லொளி, இவரது கண்களை கூச வைக்கும். அந்தக் கூச்சத்தில், அவர் தனது கண்களைத் தாழச் செய்யும்போது, அவள் மாராப்பை சரிப்படுத்தி, ஒரு அதட்டுப் போட்டு அவரைச் சரிப்படுத்துவாள். எப்படியெல்லாமோ, அந்த உருவத்தை ஆராதிக்கிறார். ஆனால் அந்த உருவமல்ல, இந்த உருவம். கிழடுதட்டி குடை சாயப் போகும் வண்டி அன்று ஒயிலாகத் தெரிந்த நடையழகு, இன்று நொண்டியடிப்பாய் தெரிகிறது. ஒடுங்கிப்போய் பனங்கொட்டையாய் மெலிந்து போனது. கண்கள், முத்தெடுத்த சிப்பிகளாய், அந்த முயற்சியில் உடை பட்டவைகளாய் தோன்றுகின்றன. ஆனாலும் அவள் மீது கொண்ட காதல் தேய்மானம் ஆகவில்லை. அந்த உருவத்தை ஆராதிப்பது போய், அவளின் உள்ளொளி, அவருக்கு கண்ணொளியாகிறது. உருவ ரசனை, அருவ ஆராதனையாகிவிட்டது. பொன்னம்பலத்திற்கு சிறிது சிறிதாய் தெளிவு ஏற்பட்டது. இல்லறத்தின் இன்றியமையா, உருவ வழிபாடு, அருவ ஆராதனையானது போல்தான் அவரது இறை வழிபாடும். இது பக்தியின் பரிணாம வளர்ச்சி சந்தேகமில்லை. ؛ : پیریم