பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 73 மாவோடு காமாட்சி வெளிப்பட்டாள். கணவருக்கு முன்பே காரியம் ஆற்றுபவள் என்பதைக் காட்டுவதுபோல் ஈரத்தலை. நெற்றியை ஒளியடிப்புச் செய்யும் விபூதி. நெற்றிப் பொட்டை மறைக்கும் பெரிய குங்கும வட்டம். காமாட்சி மகளைப் பார்த்து ஒடினாள். ஒரடி துள்ளி, ஈரடி நடந்து மூன்றடியில் நின்ற வண்ணம், மகளையும் அவளைக் கொடுத்தவரையும் மாறி மாறிப் பார்த்தாள். காது வளையங்கள், கட்டிலின் அணிகலன்கள் போல் தோன்றும்படி கட்டில் சட்டத்தில் முகத்தை அழுந்தப் போட்டிருந்த மகளைப் பார்த்தாள். பூஜை அறைக்கு வெளியே நிற்கமுடியாமலும், உள்ளே போகமுடியாமலும் தவிக்கும் கணவரை பார்த்தாள். அவர் பிடித்த பூக்கூடை சரிந்து, மலைமகளுக்கான செம்பருத்தி மலர்களும், கலைமகளுக்கான வெண்பருத்தி மலர்களும் கீழே விழுந்து கிடந்தன. பின்னிக் கிடந்தவை பிரிந்து கிடந்தன. உயரமானாலும், ஒட்டடைக் கம்பின் அழுத்தம் கூட இல்லாமல், பூஞ்சை உடம்போ டு பூப்பாரம் சுமக்க முடியாமல் வந்து நின்ற கணவனைப் பார்த்தாள். தாய்மையைக் கண்ணகித் தன்மை விரட்டியதை சாட்சி கூறுவதுபோல், குரலின் முன் பாதியில் கணிவையும், பின்பாதியில் கடுமையையும் கலந்தபடி பேசினாள். "ராகுகாலம் வரப்போகுது. நீங்க மொதல்ல உள்ளே போங்க. ஏய் இந்திரா! வாய் ரொம்பத்தான் நீளுது." "அவன் கை நீண்டதைக் கேட்கத் துப்பில்லாமல் என் வாயை அடைக்க வந்துட்டிங்களா? பரவாயில்ல. மகளுக்கு ஏத்த அம்மாவாய் இருக்கமுடியாவிட்டாலும், புருஷனுக்கு ஏத்த பெண்டாட்டியாய் இருக்கிறதுல சந்தோஷந்தான்." பாயைச் சுருட்டுவதுபோல் தன்னைச் சுருட்டிக் கொண்டு, கட்டிலில் இருந்து எழுந்து. அந்த அறைக்குள் அங்குமிங்குமாய் சுற்றும் மகளையே காமாட்சி பார்த்தாள். மகளோ, அவளை அங்கீகரிக்காமலே ஒரே சுற்றாய் ஆனவள்போல், பல சுற்றாய்ச் சுற்றினாள்.