பக்கம்:ஆடரங்கு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடரங்கு

7

ஒன்றும் அவள் காதில் விழவில்லை. அவள் கண்கள் தெளிவாக எதையும் காணவில்லை. அவள் இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது.

அப்போது சபையில் ஒரு தாடி மீசையுள்ள பெரியவர், பெரிய சரிகை அங்கவஸ்திரத்துடன் எழுந்து நின்று பரதநாட்டியத்தைப்பற்றிப் பொதுவாகவும், அன்று ஆடிய பெண்ணைப்பற்றியும், அவளைப் பயிற்றுவித்த நட்டுவனாரைப் பற்றியும் புகழ்ந்தும் சில வார்த்தைகள் பேசினார். இதில் பாதிக்குமேல் லக்ஷ்மியின் காதில் விழவில்லை; காதில் விழுந்ததையும் அவள் சரியாக அர்த்தம் பண்ணிக்கொள்ளவில்லை. ஆடை அணிகளைத் திருத்திக்கொண்டு, மறுபடியும் அரங்குக்குள் பிரவேசிக்கத் தயாராக நின்றாள். அப்பொழுதும் அவள் கண்கள் ஊர்வசியையே நாடின.

என்ன ஆச்சரியம் ! பெரியவர் பேசிவிட்டு உட்கார்ந்ததும் ஊர்வசி எழுந்து நின்று, சாவதானமாக, லக்ஷ்மியின் நாட்டியத்தைப்பற்றிப் பேசினாள். நாலைந்து நிமிஷங்களே பேசினாள்; வழக்கமான, சம்பிரதாயமான, சில வார்த்தைகளே சொன்னாள். ஆனால் அந்த வார்த்தைகளில் தனிப்பட்ட ஓர் அர்த்தம் தொனித்தது, லக்ஷ்மியின் காதில். ஊர்வசி முதலில் எழுந்து எதுவும் பேசுவதாக இல்லை என்றும், ஆனால் சிறுமியாகிய அவள் கால் தடுக்கி விழுந்ததும் அநுதாபம் பிறந்து சிறுமியாதலால் உத்சாகமூட்ட இரண்டொரு வார்த்தைகள் சொல்லவேண்டும் என்று சொல்லுகிறாள் என்றும் லக்ஷ்மிக்குத் தோன்றிற்று. முதலில் ஊர்வசியிடம் அவளுக்குக் கோபம் வந்தது. ஆனால் ஊர்வசி சிறுமியை ஆசீர்வதித்துத் தன் பேச்சை முடித்தபோது அவள் மனத்தில் இருந்த கோபம் மறைந்துவிட்டது. ஊர்வசி உட்கார்ந்ததும் உள்ளம் நிறைந்த ஒரு கனிவுடன் அரங்குக்குள் பிரவேசித்து லக்ஷ்மி சபையையும் ஊர்வசியையும் மறுபடியும் ஒரு தரம் வணங்கிவிட்டு ஆட ஆரம்பித்தாள்.

இந்தத் தடவை அவள் மனத்தில் கலையைத் தவிர வேறு எந்த ஞாபகமும் இல்லை.


 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/12&oldid=1528082" இலிருந்து மீள்விக்கப்பட்டது