பக்கம்:ஆடரங்கு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

ஆடரங்கு


"பெண்களுக்குத்தான் பொறுமை சுபாவமாகவே உண்டே?" என்றாள் சரஸ்வதி.

அவள் என்னை ஏதோ கேலி செய்கிறமாதிரி தோன்றிற்று எனக்கு. நானும் கேலியாகவே சொன்னேன். "இந்த நாட்களில் பெண்களுக்கு எது சுபாவமான குணம், எது சுபாவமல்லாத குணம் என்பதுதான் ஸ்திரமாகவேயில்லையே! பாம்பு சட்டையை உரித்துவிடுகிற மாதிரி, பெண்கள்தாம் தங்களுக்குரிய சுபாவத்தை எல்லாம் உரித்துத் தூர வைத்துவிடுகிறார்களே!”

"நீங்கள் பெண் கல்வியை ஆதரிப்பவர் அல்ல என்று தெரிகிறது என்றாள் கௌரி.

"கோபித்துக்கொள்ளக் கூடாது. உங்களை என்று சொல்லவில்லை நான்.

"இதில் கோபப்படுவதற்கு என்ன இருக்கிறது?" என்றாள் கௌரி.

"எங்களைப் பார்த்தால் எவ்வளவோ தேவலை, மற்றவர்களை எல்லாம் விட, என்று உங்களுக்குத் தோன்றுகிறது, இல்லையா?" என்றாள் சரஸ்வதி.

உண்மையிலேயே அந்தப் பெண் கெட்டிக்காரிதான். அவள் கண்களிலும் சிரிப்பிலும் வார்த்தைகளிலுந்தான் எத்தனை கேலி தொனித்தது!

நான் அந்தக் கேலியைக் கவனியாதவன் போலவே சொன்னேன்: "வெறும் கட்சி கட்டுவதற்காகச் சொல்லவில்லை நான். ஆனால் இப்போதெல்லாம் படித்து விட்டுப் பட்டம் பெற்றுக்கொண்டு வருகிற பெண்களைப் பார்த்த பிறகும் யாருக்காவது பெண் கல்வியை ஆதரிக்கத் தோன்றுமா?"

"தோன்றாதுதான். ஓரளவு வரையில் நீங்கள் சொல்வது உண்மை!" என்று ஒப்புக்கொண்டாள் கௌரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/127&oldid=1523815" இலிருந்து மீள்விக்கப்பட்டது