பக்கம்:ஆடரங்கு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜாவின் சவுரி

121

பல விஷயங்களைப்பற்றி ஆங்கிலமும் தமிழும் கலந்த ஒரு பாஷையில் பேசிக்கொண்டிருந்தார்கள்.

"எக்ஸ்யூஸ் மீ! நீங்கள் சிதம்பரத்தில் படித்தீர்களோ?” என்று அந்தப் பெண்களில் ஒருத்தியைப் பார்த்துக் கேட்டேன்.

இருவரில் பெரியவள் பதில் சொன்னாள். "ஆமாம். இவள் மூன்றாவது வருஷம் அண்ணாமலைச் சர்வகலாசாலையில் பி.ஏ.படித்தாள். நான் பட்டணத்தில் எம்.ஏ. படித்துவிட்டுச் சரித்திர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறேன். 'என் பெயர் சரஸ்வதி. இவள் பெயர் கௌரி” என்று தொடர்ந்து நான் கேட்டிருக்கக் கூடிய கேள்விகளுக்கும் சேர்த்துப் பதில் அளித்தாள்.

"அப்படியா? தங்களை அறிந்துகொண்டதில் எனக்கு ரொம்பவும் சந்தோஷமே!" என்று நான் உபசாரமாகச் சொன்னேன்.

"சிதம்பரத்தில் உங்களுக்குப் புஸ்தகக் கடை இருக்கிறது, இல்லையா?" என்றாள் சிதம்பரத்தில் மூன்று வருஷங்களுக்கு முன் படித்த மாணவி கெளரி.

"ஆமாம், அதுதான் உங்களை எங்கோ பார்த்த மாதிரி யிருக்கிறதே என்று கேட்டேன்' என்றேன் நான்.

"புஸ்தகக் கடையா?" என்று கேட்டாள் சரஸ்வதி.

"ஆமாம், ஸார் அடிக்கடி தமிழ்ப் பத்திரிகைகளில் கதைகள் கூட எழுதுவார்" என்றாள் கௌரி.

அடாடா! தேவலையே; நம்ம புகழ் இவ்வளவு தூரம் எட்டியிருக்கிறதே! எனக்குத் திருப்தியாகத்தான் இருந்தது.

"எனக்கும் ஒரு ஜர்னலிஸ்டு ஆகிவிட வேணுமென்றுதான் ஆசை” என்றாள் சரஸ்வதி.

"ரொம்பவும் சிரமமான தொழில்தான். பொறுமையை ரொம்பவும் சோதித்துவிடும்" என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/126&oldid=1523814" இலிருந்து மீள்விக்கப்பட்டது