பக்கம்:ஆடரங்கு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

ஆடரங்கு


"அந்த சரோஜாவை எனக்கும் தெரியும். பட்டணத்தில் .....ஹாஸ்டலில் தங்கிப் பி. ஏ. படித்தாளே?" என்றேன் நான்.

"ஆமாம்" என்றாள் சரஸ்வதி. ஒரு விநாடி கழித்துச் சிரித்துவிட்டுச் சொன்னாள்; "ஜர்னலிஸ்டுகளுக்குப் பொறுமை ரொம்ப வேணும் என்று சொன்ன உங்களுக்கே பொறுமை அதிகம் இல்லையே!"

"எனக்குப் பொறுமை ஏது? நான் கேவலம் ஆண். தவிரவும் நான் ஜர்னலிஸ்டு அல்ல. எப்பொழுதாவது விஷயம் அகப்பட்டால் மட்டுந்தான் எழுதுவேன். இதையெல்லாம் விடச் சிறந்த காரணமுண்டு நான் பொறுமை இழந்ததற்கு. அந்த சரோஜா லேடி வார்டனுடன் சண்டை போட்டதெல்லாம் பற்றி அந்த நாட்களில் பத்திரிகைகளிலெல்லாம் வெளிவந்தது. லேடி வார்டன் ராஜிநாமாச் செய்துவிட்டது வரையில் செய்தி வந்தது. ஆனால் அந்தச் சண்டையின் காரணம் பற்றி எதுவும் வெளி வரவில்லை......" என்றேன் நான்.

"சரோஜாவைத்தான் தெரியுமென்றீர்களே? கேட்டுப் பார்க்கிறதுதானே?" என்றாள் சரஸ்வதி.

ஏது, நம்மை மடக்கிவிடுவாள்போல் இருக்கிறதே என்று எண்ணிக்கொண்டே நான் சொன்னேன்: "சரோஜாவைக் கேட்காமலா? கேட்டுப் பார்த்தேன். அவள் சொன்னால்தானே! 'யாரோ ஒருத்தியைக் கொணர்ந்து வார்டனாகப் போட்டுவிட்டார்கள்' என்று திரும்பத் திரும்பச் சொன்னாளே தவிர வேறு எதுவும் சொல்லமாட்டேன் என்று சொல்லி விட்டாள்!"

"சரோஜாதான் அந்த லேடி வார்டனைப் படாதபாடு படுத்தி ராஜீநாமாச் செய்கிற வரைக்கும் கொண்டுவந்து விட்டு விட்டாள்" என்றாள் சரஸ்வதி. ஒரு விநாடி கழித்துத் தொடர்ந்தாள்: "விஷயம் என்னவோ ரொம்பச் சின்ன விஷயந்தான்; அதை இப்போது நினைத்தால்கூடச் சிரிப்புத்தான் வருகிறது" என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/129&oldid=1523818" இலிருந்து மீள்விக்கப்பட்டது