பக்கம்:ஆடரங்கு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கைப் பந்தயத்தில்

135


"அவர் இறக்கும்போது அறுபத்து ஒன்பது" என்றான் சிவசங்கரன்.

"பாவம்! அவரும் ரொம்பவும் கஷ்டப்பட்டார். நான் 1940-ல் பார்த்ததுதான். அதற்குப் பிறகு அவரைப் பார்க்கவில்லை. அப்போது தன் பிள்ளையைப்பற்றி ரொம்பவும் துக்கமாக என்னிடம் குறை கூறிக்கொண் டிருந்தார்" என்றான் ராஜா.

"ஆனால் அவர் இறக்கும்போது அவருக்கு ஒரு குறையுமில்லை. மிகவும் சந்தோஷத்துடன்தான் இறந்து போனார்" என்றன் சிவசங்கரன்.

"அதைக் கேட்க எனக்கும் சந்தோஷந்தான்" என்றான் ராஜா.

"ஆமாம் தாம் ஆயுள் முழுவதும் கஷ்டப்பட்டுச் சேர்த்த சொத்தை ஆறு வருஷங்களில் அழித்துவிட்ட அதே பிள்ளை ஏழெட்டு வருஷங்களில் அதைப்போல நாலு மடங்கு சம்பாதித்து விட்டான் என்று அவருக்குப் பரம திருப்தி. 'என் பிள்ளையைப் போலுண்டா!" என்று பெருமையுடன்தான் செத்தார்." என்றான் சிவசங்கரன்.

"ரொம்பவும் திருப்தி எனக்கு, இதைக் கேட்பதற்கு" என்றான் ராஜா.

"தன் பிள்ளை சின்னக் கார் வாங்கி இரண்டு வருஷம் ஓட்டிவிட்டு, அதை விற்றுப் பெரிய கார் வாங்கி ஓட்டத் தொடங்கிய பின்தான் இறந்தார்" என்றான் சிவசங்கரன். அதை அவன் தன் பெருமைக்காகக் கூறவில்லை. மிகவும் சாதாரணமாக அடக்கமாகத்தான் கூறினான்.

ராஜா மௌனமாக இருந்ததைக் கண்டு சிவசங்கரன் சொன்னான். "நான் மிலிட்டரி காண்டிராக்டுகள் எடுத்தேன். ஏதோ எப்படியோ பணம் சேர்ந்தது. ஜாக்கிரதையாக விட்டுவிடாமல் பார்த்துக்கொண்டு விட்டேன்" என்றான் சிவசங்கரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/140&oldid=1524976" இலிருந்து மீள்விக்கப்பட்டது