பக்கம்:ஆடரங்கு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

ஆடரங்கு

"அந்தப் பத்திரிகையில் உன் கதை ஒன்றைப் படித்தேன். அதில் பல விஷயங்கள் முதல் தடவை படிக்கும்போது. எனக்கே புரியவில்லை. நான் இரண்டாவது தடவை படித்துப் பல விஷயங்களைத் தெளிவாக்கிக்கொண்டேன். சாதாரணமாகப் பத்திரிகை படிப்பவர்கள் இரண்டாவது தடவை படிப்பார்களா? அதுவும் தெளிவு இல்லாததை இரண்டாவது தடவை படிப்பார்களா?

ராஜா பதில் சொல்லவில்லை. ஓர் அசட்டுச் சிரிப்புடன் உட்கார்ந்திருந்தான்.

சிவசங்கரன் தொடர்ந்து சொன்னான்: "அந்தப் பத்திரிகையின் அதே இதழில் உள்ள மற்ற விஷயங்களையும் வேலை மெனக்கெட்டுப் படித்துப் பார்த்தேன். உன் கதை அந்தப் பத்திரிகையில் மற்ற விஷயங்களுடன் பொருந்தவில்லை என்று தான் எனக்குத் தோன்றிற்று."

ராஜா சிரித்தான். அந்தச் சிரிப்பு, துக்கம் நிறைந்த சிரிப்பாகத் தோன்றியது சிவசங்கரனுக்கு. "நானே வாழ்க்கையில் அவ்வளவாக மற்ற மனிதர்களுடன் பொருந்தாத மனிதனாகி விட்டேன்! என்னுடைய வாழ்வில் நான் பொருந்தாதவன். என் எழுத்தும் என் வாழ்க்கையின் பிரதிபலிப்பாக அமைந்திருக்கிறது என்றான் ராஜா.

“உன் அப்பாவைப் பார்த்தேன் நடுவில் ஒருதரம்" என்றான் சிவசங்கரன்; பேச்சை மாற்றுகிற உத்தேசத்துடன்.

"அப்படியா! அப்பா சொல்லவே யில்லையே."

"அப்பா சௌக்கியந்தானே ?"

"சௌக்கியத்தான். உன் அப்பா..."

"என் அப்பா இறந்து பதினெட்டு மாசங்கள் ஆகிவிட்டன " என்றான் சிவசங்கரன்.

"அடாடா அப்படியா? எனக்குத் தெரியாதே!" என்ஜான் ராஜா. என் அப்பாவுக்கு இப்போது எழுபதாகிவிட்டது. உன் அப்பாவுக்கும் எழுபதிருக்கும் இல்லையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/139&oldid=1524975" இலிருந்து மீள்விக்கப்பட்டது