பக்கம்:ஆடரங்கு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

ஆடரங்கு

தவிரக் கேலி தெரியவில்லை. அவன் சொன்னான்: “பாரேன் இந்த மாசம், கடிதம் போட்டிருப்பவர்கள் ஒவ்வொருவரும் பத்துப் பன்னிரண்டு தருவதாக எழுதியிருக்கிறர்கள். கேட்டிருப்பவர்களில் ஒரு நாலு பேருக்கு பிகுப் பண்ணிக்கொண்டு எழுதாமல் இருந்து விடுவேன்.”

“தவிடு தின்பதிலே ஒய்யாரம் வேறு!”

“மற்றவர்கள் எட்டுப் பேரும் ஆளுக்கொரு பத்து ரூபாய் அனுப்பினால் இந்த ஜனவரிக்குக் குறைந்த பக்ஷ்ம் எண்பது ரூபாய் வந்து விடும்...”

“வரும் எண்பது ரூபாயை எப்படிச் செலவு செய்வது என்ற யோசனையிலே காலைப் போது போகிறதோ !” என்றான் காமு, கேலியாக.

“ஒப்புக்கொள்கிறேன். நீ சொல்வதும் உண்மைதான். என் கதைகளில் வரும் நாயகர்களிற் பலர் வேண்டுமானால் லக்ஷ்ம், கோடி என்று பணம் படைத்தவர்களாக இருக்கலாம். ஆனால் எண்பது ரூபாயைச் சேர்ந்தாப்போல நான் பார்த்து வருஷக் கணக்காக ஆகிவிட்டது. இப்போது கையில் கிடைத்தால் எப்படி அதைச் செலவு செய்வது என்று தடுமாறினாலும் தடுமாறுவேன்.”

“ஐயோ பாவம்”! என்றாள் காமு.

அவள் குரல் திடீரென்று பரிதாபத்துக்கு மாறியதைக் கேட்டு சுவாமிநாதன் மறுபடியும் நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான். காமு மேலும் சொன்னாள்.

“இதென்ன பிழைப்பு வேண்டிக்கிடக்கிறது. எழுதுங்கள். ஒருவருக்குமே புரியாத நல்ல நல்ல கதைகளாக எழுதுங்கள். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் எதாவது பிழைக்கும் வழி தேடிக்கொள்ளுங்களேன். ஏதாவது உத்தியோகம்...”

“உத்தியோகம் புருஷ லக்ஷணம் என்கிறாய் நீ.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/35&oldid=1525291" இலிருந்து மீள்விக்கப்பட்டது