பக்கம்:ஆடரங்கு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

ஆடரங்கு

வாழ்க்கை நடத்த நேர்ந்ததை எண்ணி அவன் முதலில் கொஞ்ச நாள் வருத்தப்பட்டான். ஆனால் இந்த வருத்தமோ அமைதியின்மையோ நீடிக்க வில்லை. மாதாந்தர வருவாயுள்ளவர்களின் சுக சௌக்கியங்களுடன் அவனுடைய நாட்கள் ஒன்றன் பின் ஒன்றாகச் சுலபமாய்க் கழிந்துகொண்டிருந்தன. தபால்காரன் என்ன கொண்டுவருவானோ என்று தினம் எதிர் பார்த்து நிற்க வேண்டியதில்லை. நாளடைவில் சுவாமிநாதனுக்கு அவனுடைய புது வாழ்க்கையில் பிடிப்பும் திருப்தியும் ஏற்பட்டு விட்டன.

அவனுடைய பழைய நண்பர்களிற் சிலர், பத்திரிகாசிரியர்களாக இருந்தவர்கள், அவனுக்கு எப்பொழுதாவது கடிதம் எழுதுவார்கள். ஏதாவது விசேக்ஷ இதழுக்குக் கதை வேண்டுமென்று கேட்டு எழுதுவார்கள். முதலில் கொஞ்ச நாள் சுவாமிநாதனுக்கும் எழுதவேண்டும் என்றுதான் ஆசை. ஏதாவது எழுத ஆரம்பிப்பான். ஆனால் ஆரம்பிப்பதுடன் நின்று விடும். ஓய்வு குறைவு என்பது மட்டும் அல்ல. குமாஸ்தா வாகிவிட்ட உடனேயே எழுத்தாளனின் சக்திகளும் சிறிது சிறிதாகக் குறைந்துபோய் விட்டனபோல் இருந்தது. தவிரவும் ஆபீஸ் வேலை, புது நண்பர்கள், குழந்தைகள், டெல்லிச் சமூகத்தில் இருநூறு ரூபாய் சம்பாதிக்கும் குமாஸ்தாவுக்கு உரிய ஸ்தானத்திலிருந்து நழுவாமல் இருப்பதற்கானது செய்தல் - இப்படியாக அவன் பொழுது கழிந்துகொண்டிருந்தது. பொழுது இன்பகரமாகவே கழிந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

பின்னர் சில நாட்களில் கதை எழுத ஆரம்பிப்பதைக் கூட அவன் நிறுத்திவிட்டான். ஒரு நோட்டுப் புஸ்தகத்தில் கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் பெரிய பெரிய நாவல்களுக்கும் குறிப்புகள் எழுதி வைத்துக்கொண்டான். அதுவும் சில நாட்களில் நின்றுவிட்டது. எழுதுகிறவர்களையும் பத்திரிகைகளையும் பற்றிக் குமாஸ்தாக்களுக்கே இருக்கக்கூடிய ஓர் அலக்ஷ்யத்துடன் நாளடைவில் பேசவும் தலைப்பட்டான். இலக்கியம், கலை என்று முன்னெல்லாம் எவ்வளவுக் கெவ்வளவு நெருங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடரங்கு.pdf/37&oldid=1527079" இலிருந்து மீள்விக்கப்பட்டது