தீபம்
41
மின்னிய கோணல் சிரிப்பும், அவன் தொழிலுக்கு ஏற்ற படைகளாகவே விளங்கின; யாரும் தனக்கு நிகரில்லை என்று எண்ணும் அகங்காரத்தோடு, அந்தப் பெட்டியை— ஏன் , ரயில்வேயையே விலைக்கு வாங்கி விட்டவனைப் போன்ற ஒரு தோரணையோடு அவன் காணப்பட்டான். சக பிரயாணிகளின் சௌகரிய, அசௌகரியங்களைப் பற்றிக் கவலை எதுவுமில்லாமல், அவர்கள் அனுமதியும், ஆமோதிப்பும் பெற வேண்டும் என்கிற அறிவிப்பை சட்டை செய்யாமல், அவன் பீடி புகைத்தபடி பெஞ்சு மீது வீற்றிருந்தான் .
“மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார், கண் துஞ்சார்” இனத்தைச் சேர்ந்த-கருமமே கண்ணான டிக்கட் பரிசோதகர் ஒருவர் அந்த நேரத்திலும் வந்து சேர்ந்தார். தூங்கியவர்கள் அருகே பலகையில் ‘டக் டக்’ என்று பென்சிலால் தட்டி, தூக்கத்தை ஓட்டினர். ‘டிக்கட், டிக்கட் ப்ளீஸ்’ என்று கேடடும், விழித்திருப்போரிடம் பேசாமலே விரல்களை நீட்டியும், டிக்கட்டுகளை வாங்கி விளக்கொளியில் பார்த்து விட்டு, புரட்டி, பின்பக்கத்தில் பென்சிலால் கோணல் கோடுகள் கிறுக்கிக் கொடுத்தார். ஒவ்வொருவரும் அவசரமாகவோ, சாவதானமாகவோ அவரவர் டிக்கட்டைக் காட்டி, கிறுக்கல் பெற்றுத் திருப்தி அடைந்தார்கள்.
அலட்சிய பாவத்தோடு இருந்தவன் அசையாமலே காணப்பட்டான். பரிசோதகரின் விரல் அசைவைக் காணாதவன் போலிருந்தான். ‘டிக்கட்’ என்ற ஒலியைக் கேளாதவன் போல் பாவித்த அவனை நெருங்கி நின்று, ‘டிக்கட்டை எடய்யா!’ என்று சற்று அதட்டலாகக் கேட்டார், அப்படிக் கேட்கும் உரிமை உடையவர். அவனோ அவரை எடை போடுவது போல் பார்த்தானே தவிர. எதுவும் பேசவில்லை.