பக்கம்:ஆடும் தீபம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

ஆடும்


அல்லி. மயக்கம் அடையாத நிலையில், மயங்கி மருண்டு தவித்து நின்றது அருணாசலத்தின் மனம். ராஜநாயகம் அல்லியின் நிலைக்காகப் பதறி டாக்டர் உதவியை நாடினார். அல்லிக்கு மயக்கம் தெளிந்துவிட்டது என்றாலும், பூரணமாகத் தெளியவில்லை. சாத்தையா, செந்தாமரை, வெண்டியப்பன் என்று சம்பந்தமில்லாமல் அவளது செவ்விதழ்கள் முணமுணத்தன.

தியேட்டரில் அருணாசலம் கண்டதெல்லாம் கனவோ என்னும் குழப்பநிலை அவனுள்ளே இருந்தது.

‘யாரோ நாட்டுப்புற மங்கை ஒருத்தி அல்லியைப் பெயரிட்டு அழைத்துக்கொண்டே வந்து அணைத்தது; அவளை ஒர் ஆண்மகன் அடக்கி அல்லியைக் குறிப்பிட்டு ரசமில்லாத வகையில் பேசியது; சிங்கப்பூரானைக் கண்டதும் அல்லி பேயைப் பார்ப்பதுபோல் பார்த்து மயங்கி விழுந்தது - இத்தனைக்குமாக ஏதோ ஒரு பிணைப்பு இருக்கிறது. இப்பொழுது அவனுடைய வேதனை அல்லியின் நிலைபற்றியல்ல; சாத்தையா சொன்ன சேதியைப் பற்றியது. -

சாத்தையா அருணாசலத்துடன் சும்மா காரில் வரவில்லை. வந்த பின்னும் அருணாசலத்தைச் சும்மா இருக்க விட வில்லை. காற்றடிக்கும் திசையில் நெருப்பை ஊதிவிட அவனுக்குத் தெரியும். அடிபட்டு ஓடி ஒழிந்துவிடும் சர்ப்பம் மிகவும் ஆபத்தை உண்டாக்கக்கூடியது. அது வன்மம் வைத்து, தன்னை அடித்தவர்களை காதவழி சென்றாலும் சமயம் பார்த்திருந்து கடித்தே தீரும். சாத்தையாவும் அம்மாதிரியானவன்தான் என்பதைப் பேதைப் பெண் அல்லி உணரவில்லை. சாத்தையா சாமர்த்தியசாலி. இல்லாது போனால் இந்த வயதுக்குள் சிங்கப்பூர் சென்று செல்வந்தனாகத் திரும்பி வர முடியுமா? ஆனால் அவனுடைய சாமர்த்தியம் நல்ல வழியில் பயன்படவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/89&oldid=1310509" இலிருந்து மீள்விக்கப்பட்டது