பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

முதன் முதல் எழுந்திருக்கிறது. பேசரிய உயிரை எல்லாம் பெற்று நோக்கி, பெரும் போகம் அவை அளித்து, ஆசு அகலும் அடியார் உளத்து அப்பனுடன் இருக்கும் அன்னையைக் கண்டு தொழாத கவிஞன் இல்லை. கசிந்து பாடாத கவிஞன் இல்லை.

இந்த உலகிலே பிறந்த மனிதன் முதலில் உண்ணத் தெரிந்திருக்கிறான். பின்னர் உடுக்கத் தெரிந்திருக்கிறான். பின்னர் இருக்க படுக்க இடம் தேடி இருக்கிறான். உண்டு உடுத்து உறங்கத் தெரிந்த மனிதனது வாழ்வு இவைகளில் மட்டும் நிறைவு பெறாது இருந்திருக்கிறது. இன்ப உணர்விற்கு ஏங்கி இருக்கிறான்.

அப்படி இன்பம் தேடி அலைந்த மனிதன் தான் ஓங்கி உயர்ந்த மலையைக் கண்டு அதனுடைய அழகை, காம்பீர்யத்தைக் கண்டு அதிசயித்து நின்றிருக்கிறான். அகன்று பரந்த கடலைக் கண்டு அந்தக் கடலில் விளையும் முத்தையும், பவளத்தையும் பார்த்து அந்தக் கடல் அலைகள் எழுப்பும் இன்னிசையைக் கேட்டு தன் வயம் இழந்திருக்கிறான். முன்னமேயே இறைவனைத் தாய்மை உருவிலே கண்டு தொழக் கற்ற இந்த மனிதனை, மலையையும் அலையையுமே உருவகப்படுத்தி மலை மகளாக, அலை மகளாக அந்த அன்னையை நினைக்கிறான்.

இந்த மலை மூலமாக, அலை மூலமாக ஆரம்பித்த அன்னை வழிபாடு, அவன் உள்ளத்தில் எழுந்த அழகு உணர்ச்சி காரணமாக அந்த அன்னையையே உலகிற்கு அன்போடு அறிவையும் நல்கும் நல்ல கலை மகளாகவும் உருவகப்படுத்தியிருக்கிறது. இப்படித் தான் மலை மகள் அலைமகள், கலைமகளாக, அன்னை அவன் எண்ணத்தில் தோன்றியிருக்கிறான்.