பக்கம்:ஆண்டாள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி.பா.

183


இரண்டாம் பத்து, 'நாமமாயிரம்' என்று தொடங்கும் பாசுரத்தைத் தொடக்கமாகக் கொண்டதாகும். சிறுமியர் மாயனைத் தம் 'சிற்றில் சிதையேல்' என வேண்டிக்கொள்ளும் போக்கில் இப்பத்து அமைந்திருக்கக் காணலாம்.

உமையம்மை புவனமாகிய செப்புகளை வைத்து விளையாடுகின்றாராம். அப்போது சிவபெருமான் அப்பழங்கலங்களாகிய செப்புகளைத் தன் காலினால் எற்றி விடுகிறாராம். அதனால் அக்கலங்கள் சிதைந்து ஒடுகின்றனவாம், ஆனாலும் அது குறித்துச் சிறிதும் கவலைப்படாமல் உமையம்மை மீண்டும் மீண்டும் அப்புவனமாகிய பெருங்கலங்களை எடுத்து அடுக்குகின்றாராம். இதனைக் குமரகுருபரர்.

புவனப் பெருங்கலம் எடுத்து எடுத்து அடுக்கும்
நின் கருணைத் திறம்28

என்றுபாடுவர். இம்முறையில் ஆயர்பாடிச் சிறுமியர் தம் கைத் திறமெல்லாங் காட்டிச் சிற்றில் அமைக்கின்றனர். அதனைக் காலால் எற்றியுதைத்து இடர்ப்படுத்த வருகிறான் மாயன். இச் செயல் அடாது; தகாது; எனவே மாயனே எங்கள் சிற்றிலைச் சிதையேல் என்று கூறி அவனது அருளுடைமையினை அவாவி நிற்கின்றனர்.

பங்குனிக் கடைநாளில் காமன் நோன்பு நோற்கின்றனர். ஆனால் சிரீதரனோவெனில் சிற்றில் வந்து சிதைக்கத் தருணம் பார்த்துள்ளான். சிறுமியரோ தம் முதுகு நோவு முழுநாளும் உழைத்துச் சிற்றிலை உருவாக்கியிருக்கின்றனர். ஆர்வம் மிகக் கொண்டு அழகுறச் சிற்றிலை அக்கறையுடன் ஆக்கியுள்ளனர். அந்நிலையில் "அன்று ஆலிலையின்மேல் துயின்ற பாலனாகிய நீ, எங்கள் மேல் கழிவிரக்கம் காட்டாமற் போவது எங்கள் பாவமாகவே கொள்ளத்தக்கது" என்று சிறுமியர் பேசுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/135&oldid=1462137" இலிருந்து மீள்விக்கப்பட்டது