பக்கம்:ஆண்டாள்.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

139


நீர் நிலைகளில் கயல் மீன்களோடு வாளைமீன்கள் விரவி இவர்கள் கால்களிற் பட்டுத் துன்புறுத்துகின்றன. தாமரைப் பொய்கையில் வளர்ந்திருக்கும் தாமரைக் கொடிகளின் அடித் தண்டுகள் பெண்களின் கால்களிற் பட்டு உரசிநின்று உருத்துகின்றன; நீரிலே நெடுநேரம் நின்று சோர்ந்து போகிறார்கள். நேரம் ஆக ஆகப் பலரும் நீர்நிலைகளை நோக்கி வரும் அரவம் கேட்கின்றது. ஆர்வத்தை உனக்கே என வைத்து வாழும் நாங்கள் துன்பப்படலாமா? நீ நீதியல்லாதன செய்யலாமா? இது நல்லதல்ல; மிகவும் கொடிது என்றும் நாங்கள் சொல்லிவிட்டோம். எனவே குருந்த மரத்திடை ஒளித்து வைத்திருக்கும் எங்கள் ஆடைகளைக் கொடுத்துதவி எங்கள் மானம் சீர்குலைவதினின்றும் காப்பாற்றுவாயாக என்று ஆய்ப்பாடிச் செல்வியர் அழகு நயந்தோன்ற வேண்டுவதாக அமைந்துள்ளது மூன்றாம் பத்து.

கூடல் குறிப்பினை உணர்த்தி நிற்பது நான்காம் பத்தாகும். இப்பத்து "தெள்ளியார் பலர்" எனத் தொடங்குகின்றது.

முதற்பாட்டின் முதலடியிலேயே கோதில் தமிழ் உரைக்குக் கோதையார் ஒரு தெளிந்த உயர்பொருளை உணர்த்தி நிற்கம் காணலாம். திருமாலைத் "தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்" என்று குறிப்பிட்டுள்ளார். திருமாலிருஞ்சோலை மணாளராம் திருமாலை அறிவுத் தெளிவு பெற்றோர் அனைவரும் கைதொழுதேத்துகின்றனராம்.

கூடல் இழைத்தல் என்பது கண்ணை மூடிக்கொண்டு ஒரு வட்டம் போடக் கோடு போடத் தொடங்க அக்கோட்டின் நீட்சி இரு முனைகளும் பிழையின்றி வட்டமாகப் போய்க் கூடி முடிவதாகும். அவ்வாறு தொடங்கிய கோடு ஒழுங்காக வட்டத்தில் போய் முடிந்தால் பெண்கள் தாங்கள் நினைத்தது நடக்கும் என்று முடிவு செய்வர்; வட்டத்தில் முடியவில்லை யானால் கொண்ட எண்ணம் ஈடேறாது பிழைபடும் எனக் கருதுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/141&oldid=1462143" இருந்து மீள்விக்கப்பட்டது