பக்கம்:ஆண்டாள்.pdf/182

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
180
ஆண்டாள்
 


கொண்டதாயும் மென்மைத் தன்மை மிக்கதாயுமுள்ள என் கூந்தலிலே சூட்டுங்கள்.

கம்சனைத் தொலைத்தவனும் பெரிய வில்போன்ற புருவத்தை உடையவனும் அவன் கடைக்கண்ணாகிற சிறகை யுடைய அம்பாலே நெஞ்சு முழுவதும் வெந்து போகும் படியாகப் பெற்று நிலைமை குலைந்து வருந்துகின்ற என்னைப் பார்த்து 'அஞ்சாதே" என்றொரு சொல்லும் சொல்லாதவனாய் விளங்கும் அப்பெருமான் தனது திருமார்பில் சாத்தியருளிய வனமாலையை மோசம் செய்யாமல் கொடுத்தருள்வானேயாகில் அம்மாலையைக் கொண்டு வந்து என்னுடைய மார்பிலே நெஞ்சினுள் வெப்பம் போகுமாறு புரட்டுங்கள்.

திருவாய்ப்பாடி முழுவதையும் கொள்ளைகொண்டு அனுபவிக்கிற ஒரு கறுத்த காளைபோன்ற கண்ணன் துன்பப் படுத்த, அதனால் துன்பமுற்று பலவகைகளிலும் பரிபவம் உழந்து நொந்துகிடக்கிற என்னை இவ்வுலகத்திலே தேறுதல் கூறி ஆறச் செய்பவர் யாருமிலர் எனும் நிலையில் எவ்வளவு குடித்தாலும் திகட்டாத அமிர்தம் போன்ற கண்ணபிரானுடைய அமிர்தம் சுரக்கின்ற திருவாயில் ஊறிக் கிடக்கிற அமுத நீரை உலராமல் பசையுடன் கொண்டுவந்து அதை நான் பருகும்படி செய்து என் களைப்பையும் இளைப்பையும் போக்குவீர்களாக எனத் தம் தாயாரை நோக்கிக் கூறுகிறார் ஆண்டாள்.

அழுதாலும் தொழுதாலும் தன் அழகிய வடிவைக் காட்டாதவனாயும் "அஞ்சேல்" என்ற சொல்லைச் சொல்லாத வனாயுமுள்ள கண்ணன் இங்கே வந்து என்னை நெருங்கியணைத்து முன்னும் பின்னும் சூழ்ந்து கொண்டிருந்து போகாமலிருக்கிறான். பசுக்கூட்டங்களின் பின்னே கண்ணன் ஊதிக்கொண்டு வரும் புல்லாங்குழலின் துவாரங்களில் உண்டாகிற நீரைக் கொணர்ந்து என்னுடைய முகத்திலே தடவிக் குளிர்ச்சியை ஊட்டுங்கள் என்கிறார் ஆண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/182&oldid=1158216" இருந்து மீள்விக்கப்பட்டது