உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆண்டாள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

ஆண்டாள்


ஆகவே; இதுவரை கண்ட செய்திகளிலிருந்து கண்ணனிடமே காதல் கொண்டு பிள்ளைப் பருவத்திலிருந்து அவனையே அடைய வழி தேடிக் கொண்டிருந்தார் ஆண்டாள்; அவர் பின்னர் சான்றோரால், வழிபடுவோரால் கண்ணனாகக் கருதப்படும் அரங்கநாதனிடம் சென்று சேர்ந்து மரணமிலாப் பெருவாழ்வு பெற்று உய்ந்தார்; தம் பாக்களால் இவ்வுலகோரை உய்யவைத்தார் என்றுணரலாம்.

கோதை தமிழ்

நாயன்மார்களும் ஆழ்வார்களும் தமிழால் இசை பாடி இறைவனை வழுத்தினார்கள். இவர்களுள் ஆண்டாளும் ஒருவராவர். ஆனால், ஏனையோரைக் காட்டிலும் இவர் உயர்ந்தவர். ஏனெனில் அவர்கள் எல்லோரும் தம் பாக்களை தமிழில் பாடியதாகக் கருதினார்களே அல்லாமல் இவரைப் போன்று தமிழே தம் பாடல்கள் எனச் செப்பினார் அல்லர். தமிழும் தம் பாடல்களும் ஒன்றே என்பது இவர் கருத்து.

கோதை வாய்த் தமிழ் வல்லவர்
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்
கோதை தமிழ் ஈரைந்தும்
செந்தமிழ் பத்தும் வல்லார்
புதுவையர் கோன் கோதை தமிழ்

என இவர் மொழியும் மொழிகளே இதற்குத் தக்க சான்றுகளாகும். இவ்வகையில் இவரது பாக்கள் உயர்வும், அழகும், சீர்மையும், இனிமையும் வாய்ந்து நுட்பப் பொருளைப் பொதிந்து கொண்டிருப்பன என்று கூறலாம்.

ஆண்டாள் இறைவன்பால் கொண்ட ஆழ்ந்த அன்பையும் தேர்ந்த அறிவுத் திறத்தையும் திருப்பாவை எடுத்துரைக் கின்றது. இவ்வுலகில் அறியாமையால் மூழ்கிக் கிடக்கும் ஆன்மாக்களை இதன் மூலம் தட்டி எழுப்புகிறார் ஆண்டாள். ஶீ இராமாநுசர் இத்திருப்பாவையில் மிகுந்த ஈடுபாடுடை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/50&oldid=958451" இலிருந்து மீள்விக்கப்பட்டது