34
நன்மை பயக்குமெனின்
“நான் புஸ்தகத்தைக் கொடுக்க முடியாது. உம்மால் இயன்றதைப் பாரும்.”
“என்ன இது அதிகப் பிரசங்கித்தனமாக இருக்கிறது! புஸ்தகத்தைக் கொடுமென்றால்…”
“அதைக் கொடுக்க முடியாது…”
“இதோ ரூபா இருக்கிறது. எடுத்துக் கொண்டு போம். நான் அண்ணாச்சியிடம் பேசிக் கொள்ளுகிறேன்.”
“அண்ணாச்ச்சியாவது, ஆட்டுக் குட்டியாவது? புஸ்தகத்தைக் கொடும் என்றால்.…”
வார்த்தை அதிகப்பட்டது. ஏக வசனமாக மாறியது.
“அப்பா அதைத்தான் கொடுத்து விடுங்களேன்” என்றது, தழுதழுத்த குரல் கதவு இடையிலிருந்து.
கண்கள் மாத்திரம் நடராஜன் மனதில் பதிகிறது. தங்கம்தான்! என்ன தங்கம்! மனதிற்குள், “இவனுக்கா இந்தப் பெண்” என்ற நினைப்பு.
“போ கழுதை உள்ளே. உன்னை யார் கூப்பிட்டது? நியாயம் சொல்ல வந்தாயாக்கும்! போ நாயே!”
நடராஜன் கோபமாகத் தகப்பனாரிடம் சென்றான்.
“என்ன அப்பா, இப்படிச் செய்கிறாரே?”
“அதற்கென்ன செய்யலாம்? நீ எப்படியாவது முடித்து விடு. வீண் சச்சரவு வேண்டாம். உனக்கு உலகம் தெரியவில்லையே!”
“திருட்டுத்தனமல்லவா?”
“திருட்டுத்தனம்தான். யார் இல்லையென்று சொன்னது? எனக்காக முடித்து விடு.”
“நீங்களும் இப்படிச் சொல்லலாமா? அவர் பெண்ணுக்கு இருக்கிற புத்தி கூட…”
கண்களுக்குப் பின் நின்ற முழு உருவம் எப்படியிருக்குமென்று நினைத்துக் கொண்டே, காரியத்தைச் சரிப்படுத்தச் சென்றான்.