10. ஆத்மாவின் ராகங்கள் 'பரவாயில்லை! இந்தப் பத்துப் பதினைஞ்சு வரியை நானே அடிச்சுக் கொடுத்திட முடியும் நாயுடு...'
"சே சே! நானே அடிச்சுக்கிறேங்க. நீங்க சிரமப்பட வேணாம். எழுதிக் குடுங்க. தேசத்துக்காக எவ்வளவோ செஞ்சவருக்கு நாம இதுகூடச் செய்யாட்டி... அப்புறம் இந்த நாட்டிலே நாம் பொறந்தோம்கிறதிலே அர்த்தமே யில்லை!... கடைசிப் பெரிய மனுசனும் போயிட்டான்..."
நாயுடுவின் பதில் எனக்குத் திருப்தி அளித்தது. மனம் பதற - கை பதற செய்தியை எழுத உட்கார்ந்தேன். சொந்தத் தந்தையின் மரணத்தின்போதுகூட நான் இவ்வளவு வேதனைப்ப்ட்டதில்லை. யாரால் இந்த நிலைக்கு வந்தேனோ அந்தப் பெருந்தன்மையாளரின் மரணச் செய்தியை எழுதும் போது நான் எத்தகைய உணர்வுகளை அடைந்திருப்பேனென்பதை விவரிக்க வேண்டிய தில்லை. போன மாதம் மதுரைக்குப் போயிருந்த போது ஒர் இரண்டு மணி நேரம் ஆசிரமம் இருந்த கிராமத்துக்குப் போய், அவரோடு பேசிக் கொண்டிருந்தேன்.
'நாங்களெல்லாம் அரும்பாடுபட்டுப் பாரதமாதாவின் முகத்தில் பன்னூறு ஆண்டுகளாக மறைந்திருந்த புன்னகையை மீண்டும் வரவழைத்தோம். இந்த இருபத்தோராண்டுகளில் அந்தப் புன்னகை மீண்டும் படிப்படியாக மறைந்து கொண்டு வருகிறது. ராஜு! மறுபடியும் அவள் முகத்தில் புன்னகையைப் பார்க்காமல் நான் சாக விரும்பவில்லை. எனக்கு வயதாகி விட்டது. நீங்களெல்லாம் புகழ்ந்து எழுதும்படி தேசத்துக்கு எவ்வளவோ செய்தாச்சு. ஆனாலும் மறுபடி நான் கவலைப்பட எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. நாங்கள் போராடிய காலத்தில் இந்த தேசத்தில் தேசம், விடுதலை பெற வேண்டுமென்ற ஒரே இயக்கமும், ஒரே தலைமையும் தாம் இருந்தன. இன்றோ ஒவ்வொரு மாநிலத்திலும் ஒன்பது வகை இயக்கம்: ஒன்பது வகைத் தலைமை எல்லாம் வந்துவிட்டன. ஆயிரம்