154 ஆத்மாவின் ராகங்கள் அவருடைய ஆசியைப் பெற்றிருந்தனர். இப்போது அதைச் செய்ய ஏற்ற தருணம் வந்துவிட்டதாகப் பிருகதீஸ்வரன் கருதினார். சட்டசபை முனிசிபல் தேர்தல்களில் ஈடுபட்டுப் பதவியை அடைவதைவிட இப்படிப் பணிகளில் இறங்குவது நாட்டுக்கு நல்லதென்று பிருகதீஸ்வரன் கருதினார். ஜில்லா போர்டு தேர்தல்கள், சட்டசபைத் தேர்தல்களைவிட மகாத்மாவின் சமூக சீர்த்திருத்த லட்சியங்களே இருவரையும் கவர்ந்தன. அடுத்தடுத்துத் தமிழ்நாட்டில் சுற்றுப் பிரயாணம் செய்த பாபு ராஜேந்திர பிரசாத், ஜவர்ஹர்லால் நேரு ஆகியவர்களிடம் இது பற்றிக் கூறி யோசனை கேட்டார்கள் அவர்கள். அவர்களுடைய ஆசியும் கிடைத்தது. லக்னோ காங்கிரஸுக்குப் போகாத குறை நேருவைத் தமிழ்நாட்டில் சந்தித்ததில் தீர்ந்தது போலிருந்தது அவர்களுக்கு.
ஒவ்வொரு முறையும் தேர்தல், தலைவர் பதவி போட்டி எல்லாம் ஏற்படக் காங்கிரஸ் இயக்கத்தில் குழுமனப் பான்மை மெல்ல மெல்ல வளருவது அவர்களுக்குக் கவலையளித்தது. மதுரை, காரைக்குடி, வேலூர், வத்தலக்குண்டு ஆகிய இடங்களில் ஒவ்வொரு தலைவர் தேர்தலிலும் இயக்கத்தின் சகோதர பாவமுள்ள தொண்டர்கள் பிரிவதும், கட்சி கட்டுவதும் கண்டு, 'ஐயோ! இந்த ஒற்றுமைக் குறைவு பெரிதாகி நாட்டின் எதிர் காலத்தைப் பாதிக்கக்கூடாதே" என்று அவர்கள் கவலைப்பட்டார்கள். ஹரிபுரா காங்கிரஸில் சுபாஷ் பாபு மகாசபைத் தலைமையைப் பெற்றார். அசெம்பிளி தேர்தலில் விருது பட்டி தேசத் தொண்டரும் நண்பரும் அயராத ஊழியரும் ஆகிய காமராஜ் நாடார் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பட்டது ராஜாராமனுக்குப் பெரிதும் மகிழ்ச்சி அளித்தது. முதல் முதலாகச் சட்டசபை அமைத்தபோது ராஜாஜி மந்திரி சபையில் சத்தியமூர்த்தி மந்திரியாக இடம் பெறாதது அந்த மகிழ்ச்சியை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஆகிவிட்டது. ஆனால், அந்த மந்திரி சபை ஆலயப் பிரவேசச் சட்டம் கொண்டு வந்தது உடனடி உதவியாக அமைந்தது. சேலம் ஜில்லாவில் மதுவிலக்கும் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. மாபெரும் தேசிய விரதத்தைப் போலவும், பல