நா. பார்த்தசாரதி 183
முத்திருளப்பன் அடுத்த நாளிலிருந்து சத்திய சேவா சிரமத்தின் ஆசிரியர்களில் ஒருவராகி விட்டார். குருசாமி தையல்மிஷினோடு ஆசிரமத்திற்குப் போய்விட விருப்பம் தெரிவித்தான். ஆசிரமத்திலேயே சர்க்கா நூற்றல், நெசவு எல்லாம் இருந்ததால், உடைகள் தைக்கக் கொள்ள ஒருவர் வேண்டுமென்று பிருகதீஸ்வரன் சொல்லிச் சொல்லித் தம்மையறியாமலே அவனுக்கும் அந்த ஆவலை வளர்த்து விடடார். ராஜாராமன் வாசகசாலையோடும், நகர காங்கிரஸ் கமிட்டி வேலைகளோடும், தனித்து விடப்பட்டது போன்ற உணர்ச்சியை அடைந்தான். அவனுடைய உலகம் திடீரென்று சின்னஞ்சிறியதாகிவிட்டது போலிருந்தது.
பத்தர் முன்போல் அதிகம் கடைக்கு வருவதில்லை. வயதாகி விட்டதால் மகனிடமும் வேலையாட்களிடமும் கில்ட் கடையை விட்டுவிட்டு, காலையில், ஒடுகால் ஸ்நானம், வடக்கு மாசி வீதி ராமாயணச் சாவடியில் சனிக்கிழமை பஜனை, ராமாயணம் கேட்பது - என்று மாறிப் போய்விட்டார். எப்போதாவது அவனையும் மதுரத்தையும் பார்த்துப் பேசவருவதைத் தவிரச் சித்திரை வீதியில் அவரைப் பார்ப்பது அபூர்வமாகிவிட்டது. அந்த வருடம் சித்திரையில் தம்முடைய இரண்டாவது பெண்ணுக்குக் கலியாணம் கட்டிக் கொடுத்துவிட வேறு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார் பத்தர். ராஜாராமன் பெரும்பாலான நேரத்தைக் கமிட்டி ஆபீஸிலும் மீதி நேரத்தை வாசகசாலையிலும் கழிக்க நேர்ந்தது. இதற்கிடையே தனபாக்கியம் காலம்ாகி ஆறுமாதத்துக்கு மேலாகியிருந்ததால் மதுரம் கச்சேரிகளுக்கு மீண்டும் போய்வரத் தொடங்கியிருந்தாள். இந்தக் கச்சேரிகளுக்குத் தேடி வருகிற தனவந்தவர்களிடம் பேசி முடிப்பதை அவன் செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டாள் அவள். அதனால் அந்த வேலை வேறு ராஜாராமனிடம் வந்து சேர்ந்தது. கச்சேரி கேட்டு அவள் வீட்டுக்கு வருகிறவர்களை வாசகசாலைக்கு அனுப்பினாள் அவள். அவன் ஒப்புக் கொண்டு சம்மதித்தால் தான் அவள் அந்தக் கச்சேரிக்குப் போவாள். அவனுக்குப் பிரியமில்லை,