பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/215

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 213 விழிகளில் நெகிழும் நீரும், முகத்தின் எல்லையற்ற சாந்தமும் அவனை உருக்கின. எவ்வளவு நேரம் அப்படிக் கண் கலங்கியிருந்தோமென்று அவனுக்கே தெரியாது. இளைத்த வலது கையைத் தூக்கி அவனை அழாமலிருக்கும் படி ஜாடை காட்டினாள் அவள். அவன் கண்களைத் துடைத்துக் கொண்டான். கை ஜாடையாலேயே அவனைக் 'காலையில் ஏதாவது சாப்பிட்டாயிற்றா இல்லையா? என்றும் விசாரித்தாள் அவள். தளர்ந்து செத்துக் கொண்டிருந்த நிலையிலும் வெள்ளமாகப் பெருகும் அவள் அன்பு அவனைப் பிரியத்தாலேயே கொல்வது போலிருந்தது. ஆசிரமத்துக்கு நிலம் எழுதித் தந்தது, வீட்டை அடமானம் வைத்தும் நகைகளை விற்றும் பணம் உதவியது, எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகச் சொல்லிப் புலம்பினான் அவன். அவள் இப்படியாகி இந்த நிலைக்கு வந்ததற்குத் தானே காரணம், என்று அவன் கூறத் தொடங்கியபோது, செல்லமான கண்டிப்பு முகத்தில் தெரிய,

'நீங்க வந்து பக்கத்திலே இருக்கீங்கங்கற சந்தோஷத்திலே எனக்குப் போன மூச்செல்லாம் திரும்ப வந்திண்டிருக்கு. அந்த சமயத்திலே நீங்கள் இப்படி எல்லாம் பேசினா எப்படி? தயவு செய்து இப்படிப் பேசாதீங்கோ...' என்று ஒவ்வொரு வார்த்தையாக இருமலை அடக்கியபடி கூறினாள் மதுரம். அவளுடைய ஒவ்வொரு சொற்களும் சற்றுமுன் அவளே அவன் பாதத்தில் உதிர்த்த ரோஜா இதழைப்போல் மிருதுவாக அவன் செவிகளில் வந்து பூவிதழ்களாய் உதிர்ந்தன. அவனுடைய உடம்பு இளைத்திருப்பதைப் பற்றி வருத்தப்பட்டாள் அவள்.

அப்போது பிருகதீஸ்வரனும் ஜமீன்தாரிணியும் உள்ளே வந்தார்கள். பிருகதீஸ்வரன் வந்த திசையை நோக்கி, எழுந்திருக்க முயன்றபடியே கைகூப்பினாள் மதுரம். பிருகதீஸ்வரன் எழுந்திருக்க வேண்டாம் என்று அவளுக்கு ஜாடை காண்பித்துக் கொண்டே அருகே வந்தார்.