பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 229 கருதினார்கள். இந்தக் குழப்பம் காங்கிரஸ் மேலிடம் வரை போயிற்று. பிரிவுகளும் பேதங்களும் பலமாயின்.

அப்போது அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராயிருந்த அபுல்கலாம் ஆசாத் நிலைமையை நேரில் கண்டறிவதற்காகக் காரியக் கமிட்டி உறுப்பினரான அஸ்ப் அலியைத் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்தார். 1945 டிசம்பர் மாதம் பதினெட்டாம் தேதி அஸ்ப் அலி சென்னைக்கு வந்து சேர்ந்தார். ஒரு வாரம் தங்கினார். அப்புறம் சர்தார் பட்டேலைச் சந்திப்பதற்காகப் பம்பாய் போனார். கடைசியில் இந்தக் கோஷ்டியில் ஐந்து பேர், அந்தக் கோஷ்டியில் மூன்று பேருமாக எட்டுப் பேரும் கொண்ட பார்லிமெண்டரி கமிட்டி அமைக்கப்பட்டது.

இப்போதெல்லாம் முன்னைப்போல் கட்சி வேலைகளில் ராஜாராமனுக்கு ஈடுபாடு இல்லை. ஆசிரமத்தை வளர்க்கவும் கல்வி அறிவைப்பெருக்கி வேற்றுமைகளை அகற்றுவதன் மூலம் நாட்டின் தீண்டாமையை ஒழித்துக் கட்டவும் சுதேசித் தொழில்களை வளர்க்கவும் பாடுபட விரும்பினான் அவன். மகாத்மா காந்திக்குப்பின் அவரைப்போல் இனிமேல் ஆத்ம பலத்தையும், சேவைமனப்பான்மையையும் பெரிதாக மதிக்கும் தலைவர்கள் தோன்றுவார்களா என்று எண்ணித் தயங்கியது அவன் உள்ளம். 'எப்போதோ இந்தத் தேசம் செய்த தவத்தின் பயனாக மகாத்மா வந்து தோன்றியிருக்கிறார். அவரை நம்பி, அவருடைய சத்தியாக்கிரக வழியை நம்பித் தேசிய இயக்கம் என்கிற மகாவிரதத்தை மேற்கொண்டவர்கள், அவர் இருக்கிறவரை தான் இங்கே வணங்குவதற்கும், பூஜிப்பதற்குமுரிய ஒரு அவதார புருஷனைப் பார்க்க முடியும். அப்புறம் இந்தியாவில் தலைவர்கள் இருப்பார்கள். ஆனால் ஆத்ம பலத்தையும், சத்தியத்தையும் கருணையையும், அன்பையும் மட்டுமே நித்திய சாதனங்களாக நினைக்கும் தலைவர்கள் இருப்பார்களா? கொஞ்ச நாட்களாக அவனுக்கும், பிருகதீஸ்வரனுக்கும் இதைப் பற்றியே விவாதங்கள் நடந்தன.