பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 47 வைத்துக் கொண்டதைப் போல் வீட்டில் ஒடுங்கிக் கிடப்பது அவனுக்குப் பொறுக்க முடியாததாயிருந்தது. பொறுத்துக் கொண்டும் ஆக வேண்டியிருந்தது. அந்த வீட்டில் அவனுக்குப் பிடித்ததைப் பேசவும் மனிதர்கள் இல்லை; பிடிக்காததை எதிர்த்துப் பேசினால், அதைக் கேட்டகவும் மனிதர்கள் இல்லை. சொந்த ஊரில், சொந்த நாட்டில், குடியிருக்கும் வீட்டிலேயே அந்நிய நாட்டில் இருப்பது போல் இருக்க வேண்டியிருந்தது.

குருசாமியும், முத்திருளப்பனும் கைதாகிய செய்தி அவனைப் பலவிதமான யோசனைகளில் மூழ்கச் செய்திருந்தது. குருசாமியாவது தனிக்கட்டை, தையற் கடையை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்பது தவிர வேறு கவலையில்லை. முத்திருளப்பன் குடும்பஸ்தர். ஜெயிலுக்குப் போனதால் வேலையும் போய்விடும். அவருடைய குடும்பத்துக்கு இது பெரிய சோதனையாயிருக்கு மென்பதை இப்போதே ராஜாராமனால் உணர முடிந்தது. ஏற்கெனவே பிட்டுத் தோப்பில் சீட்டுக் குலுக்கிப் போட்டு முடிவு செய்த மாதிரிக் குருசாமி செல்லூரில் கள்ளுக்கடை மறியல் செய்வதும் நடைபெற முடியாது. முத்திருளப்பன் வெளியே இருந்து வாசக சாலையைக் கவனிப்பது என்பதும் நடக்காது. ஒருவேளை வாசக சாலையைப் பத்தர் கவனித்துக் கொள்ளலாம். போலீஸ் தொந்தரவு, சி.ஐ.டி. நடமாட்டம் அதிகமாகித் தொழிலுக்குத் தொந்தரவு வருமானால், பத்தரும் அதைச் செய்ய மாட்டார். வக்கீல் குமாஸ்தா திருவேங்கடத்தை போல் வெள்ளைக்கார தாசர் இல்லை என்பது தான் பத்தரிடம் விரும்பத்தக்க அம்சமே தவிரப் போராட்டத்தில் இறங்கும் துணிவெல்லாம் அவரிடம் கிடையாது. உபகாரி, காந்தியிடம் நம்பிக்கை என்ற அளவில் முழுமையான பக்தி உள்ளவர் என்பது வரை, பத்தர் சந்தேகத்துக்கிடமில்லாதவர். வாசக சாலையை அவர் நடத்துவாரா இல்லையா என்பது பற்றியும் சிந்தித்து ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்தான் ராஜாராமன்.