பக்கம்:ஆப்பிள் பசி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்த ஜுர வேகத்தில் பாப்பாவின் கரங்களைத் தன் கைகளால் பற்றிக் கொண்டு; “பாப்பா! நீ எப்பவும் இத்த மாதிரி என்னோடேயே இருக்கணும் போல இருக்குது. என்னைத் தனியா விட்டுட்டுப் போயிட மாட்டியே...?” என்று அவளைத் தன் பக்கமாக இழுத்து அணைத்துக் கொண்டான்.

“ஐயோ, விடுங்க என்னை” என்று வெட்கத்தோடு கொண்டாள் பாப்பா. அவள் கைகள் நடுங்கின. கண்களில் பயமும் படபடப்பும் தெரிந்தன.

“கோவமா, பாப்பா?”

அவள் பதில் எதுவும் கூறாமல், “அமிர்தாஞ்சனம் கொண்டு வரட்டுமா?” என்று கேட்டாள்.

“உம்” என்றான்.

அவள் அமிர்தாஞ்சனம் எடுத்து வந்து அவன் நெற்றியில் தேய்த்தாள்.

“உன்னோடு பழகினது கொஞ்ச நேரம்தான். ஆனாலும் ரொம்ப நாளாப் பழகின மாதிரி தோணுது. உன் அளவுக்கு என்னிடம் அன்பு காட்டினவங்க, ஆதரவாப் பேசினவங்கன்னு இதுவரை யாருமே கிடையாது. என் வாழ்க்கையிலே நீ ஒருத்திதான் முதல் முதல்...”

அவள் மௌனமாக இருந்தாள்.

“நான் நேற்று ராத்திரி ஒரு வேடிக்கையான கனவு' கண்டேன். அதைச் சொல்லட்டுமா?”

“சொல்லுங்க.”

“திடீர்னு நான் செத்துப் போயிடறேன். எனக்காக யாருமே அழலே. “சாமண்ணா , நீ செத்துப் போயிட்டயா”ன்னு நாலைஞ்சு பேர் மட்டும் அழறாங்க. அவங்க யார்னு பார்த்தா அத்தனை பேரும் சாமண்ணா!”

“அப்புறம்?”

“நாலு பேர் என்னைச் சுடுகாட்டுக்குத் தூக்கிட்டுப் போறாங்க... அந்த நாலு பேர் யாருன்னு பார்க்கிறேன்.”

“யார் அது?”

“அவங்களும் நானேதான். நாலு சாமண்ணா என்னைத் தூக்கிட்டுப் போறாங்க...

“அப்புறம்?”

“நெருப்புச் சட்டி தூக்கறவன், கொள்ளி வைக்கிறவன், எலும்பு பொறுக்கறவன், பால் விடறவன், அஸ்தி கரைக்கிறவன் எல்லாமே நான்தான். ரொம்ப வேடிக்கையாயில்லே.”

“ரொம்பப் பரிதாபமாயிருக்குங்க.”

“இப்ப எனக்காகக் கண்ணீர் விட நீ ஒருத்தி இருக்கேங்கற நினைப்பே எனக்கு எவ்வளவு ஆறுதலாயிருக்கு தெரியுமா?”

“பாப்பா, சுடச்சுட காப்பி கொண்டு வந்திருக்கேன்” என்று கூஜாவைக் கொண்டு வைத்தான் குமாரசாமி.

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/19&oldid=1028378" இலிருந்து மீள்விக்கப்பட்டது