பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9

யாவரும் அறிந்தது. எனவே காஞ்சிக் கடிகையும் காஞ்சிபுரத்தில் மிகப் பழமையான கோயில்களுள் ஒன்றில் இருந்திருத்தல் வேண்டும். கச்சிநெறிக் காரைக்காடு, கச்சி ஏகம்பம், திருமேற்றளி என்பன காஞ்சிக்கோயில்களுள் மிகப் பழமை வாய்ந்தவை. இவற்றுள் முதலிரண்டைச் சம்பந்தரும், பின் இரண்டை அப்பரும், கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் பாடியுள்ளனர். ஐயடிகள் காடவர் கோனும் க்ஷேத்திரத் திருவெண்பாவில் கச்சி ஏகம்பத்தைப் பாடியுள்ளார். எனினும் அப்பர் திருமேற்றளியைப் பாடுங்கால் ‘கல்வியிற் கரையிலாத காஞ்சி மாநகர்’ என்று குறிப்பிட்டுள்ளார்; ஆகவே மிகப் பழங்காலத்தில் கச்சி மேற்றளியில் கடிகை இருந்திருத்தல் வேண்டும் என்று ஊகிக்கலாம்; துணிந்து கூற இயலாது.

அப்பர் காலத்துக்குப் பிற்பட்ட ராஜசிம்மனால் கைலாச நாதர் கோயில் கட்டப்பெற்றது. அங்கு விக்கிரமாதித்தனது கல்வெட்டு இருக்கிறது என்றும் அக் கல்வெட்டை அழிப்பார் கடிகையாரைக் கொன்றவர் புகும் உலகில் புகுக என்று கூறி யுள்ளான் என்றும் மேலே கூறப்பட்டது. கடிகையாரைக் கைலாசநாதர் கோயில் கல்வெட்டில் கூறியுள்ளமையின், கைலாசநாதர் கோயில் எடுப்பித்த பிறகு, கடிகை அக் கோயிலில் நடைபெற்றது என்றும் கொள்ளலாம். இவ்வூகத்தை உறுதிப்படுத்தத் தண்டியலங்கார மேற்கோள் பாடல் துணைபுரிகிறது. வடமொழித் தண்டி, கைலாசநாதர் கோயில் கட்டிய கொற்றவனாகிய இராஜசிம்மன் காலத்தவர்; ஆனால் தமிழ்த் தண்டியோ பிற்காலத்தவர்; எனினும் மேற்கோள் பாடலில் கண்ட பொருள் கடிகை இருந்த இடத்தை நிர்ணயிக்கப் பெரிதும் துணை புரிகிறது என்பதில் ஐயமில்லை.

காஞ்சிபுரத்துக் கிழக்கெல்லையில் இப்போதும் வரதராஜப் பெருமாள் கோயில் இருக்கிறது; மேற்கில் கைலாசநாதர் கோயில் இருக்கிறது; வடக்கிலும் தெற்கிலும் இரண்டு ஏரிகள். அவற்றுள் ஒர் ஏரிக்குப் பிற்காலத்தில் முடிகொண்ட சோழப் பேரேரி என்பது பெயர். (A. R. No, 35 of 1883); இது