பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7

இந்தப்பெயர்கள் வால்மீகியால் தரப்பட்டவையே. வால்மீகி தம் காண்டங்களின் உட்பிரிவுகட்குச் சருக்கம் என்னும் பெயர் தந்துள்ளார். கம்பர் காண்டங்களின் உட்பிரிவு கட்குப் படலம் என்னும் பெயர் தந்துள்ளார். அண்ணா மலைப் பல்கலைக் கழகப் பதிப்பின்படி, இந்த ஆரணிய காண்டத்தில் பதினொரு படலங்கள் உள்ளன.

கம்பரும் வால்மீகியும்

வால்மீகி ராமாயணத்தின் வழிநூலே கம்ப ராமாயணம்; எனினும், கம்பர் வால்மீகியினும் சிற்சில வேறுபாடுகள் கொண்டுள்ளார். அடிப்படையான பெரிய வேறுபாடாவது: வால்மீகி இராமனையும் சீதையையும் மக்கள் போல்கொண்டு அதற்கேற்பக் கதையை அமைத்துச் சென்றுள்ளார். கம்பரோ இருவரையும் திருமால் - திருமகள் ஆகியோரின் தெய்வப் பிறவிகளாகக் கொண்டு அதற்கேற்பக் கதையை அமைத்துச் சென்றுள்ளார்.

கதையின் இடையிடையே இருவர்க்கும் சிறுசிறு மாறு பாடுகள் பற்பல உண்டு. வால்மீகி சொன்னதைக் கம்பர் விட்டிருப்பார் - வால்மீகி சொல்லாததைக் கம்பர் சொல்லி யிருப்பார். புனைவுகளில் இருவர்க்கும் இடையே ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். ஒரு செய்தியையே வால்மீகி ஒருவித மாகவும் கம்பர் வேறுவிதமாகவும் சில இடங்களில் கூறி யுள்ளனர். ஆரணிய காண்டத்தில் இருவரும் மாறுபடும் இடங்களைக் குறிப்பிடலாம் என முதலில் எண்ணினேன். ஆனால், இதனால் கம்பர் பாடல்களில் உள்ள தெய்வத் தன்மையோடு கூடிய நயமும் சுவையும் கெட்டுவிடும் என்று பின்னர் எண்ணி வேறுபாடுகளைக் குறிப்பிடாமல் விட்டு விட்டேன். ஒரு வரலாற்றையன்று - ஒரு கதை வடிவில் வரலாற்றைப் பலர் எழுதும்போது, இவ்வாறு சில அல்லது பல வேறுபாடுகள் இடம்பெறுவது இயற்கை.