பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

தரும் நடுவர் உள்பட வேறு யாருக்கும் உரிமையில்லை. இந்த வகையில் உணர்ந்தோ உணராமலோ, நாம் கடந்த மே மாதத் தென்மொழியில் எழுதிய, 'இந்து மதத்தினின்று தமிழர்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற வேண்டும்' என்ற ஆசிரியவுரைக் கருத்தும் வேண்டுகோளும், காலத்தேவையால் நன்கு செயல்பெற்று வருகின்றன. இந்த வகையில், இவ்விந்துமதச் சரிவை நம்மினும் மேலாக வேறு எவரும் வரவேற்று மகிழ்ந்திருக்கவியலாது.

மீனாட்சிபுரத்திலும் அதையடுத்துப் பிற ஊர்களிலும் நிகழ்ந்த இவ்வித்துமத வெளியேற்றங்களைப் பற்றிப் பலரும் பலவகையான கருத்துகளையும் கற்பனைகளையும் அவ்வப்பொழுது, தங்கள் தங்கள் மனவளர்ச்சிக்கும் அறிவு வளர்ச்சிக்கும் ஏற்ற வகையிலும், விருப்பு வெறுப்புகளுக்கு ஒத்த முறையிலும், கூட்டங்களில் உரைகளாகவும், செய்தித்தாள்களில் அறிக்கைகளாகவும் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவர்களின் மதப் பித்தங்களும், மூடக் கொள்கைகளும் நன்கு வெளிப்பட்டு வருகின்றன. சிலர் இந்த மதமாற்றத்தைக் கடுமையான சொற்களால் கண்டித்துள்ளனர். சிலர் இதற்கு இழிவான நோக்கங்களைக் கற்பித்துள்ளனர். சிலர் இம் மதமாற்றத்தினால் ஏற்படும் தீமை நன்மைகளைத் திறனாய்வு முறையில் வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களுக்கிடையில், மத அடியார்கள் பலருங் கூடி, மதம் மாறியவர்களின் புண்பட்ட நெஞ்சுகளில் பொதுமைப்புனுகைத் தடவியுள்ளனர். வேறு சிலர் அவ் வாழ்வறியா மாந்தர்களைத் தம் வாய்க்கு வந்தபடி சாடியுள்ளனர். இன்னுஞ்சிலர் மானங்கருதி மதவிலக்கீடு செய்த அவர்களை நோக்கி ‘அவர்கள் எங்கிருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்களே’ என்று மனம்நோகப் பேசியுள்ளனர். இந் நிலையில், ஒரு சில நல்லவர்களே அவர்களின் இத்தகைய போக்கை வரவேற்று வாழ்த்தியுள்ளனர். அண்மையில் தவத்திரு. குன்றக்குடியடிகளார் ‘மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் கொண்டு வரவேண்டும்’ என்று மாநில, நடுவண் அரசுகளைக் கேட்டுக் கொண்டிருப்பது பொருளற்றது; நன்றாக ஆராய்ந்து பாராதது. இந்து மதம் என்பது தமிழர் மதமன்று என்னும் வரலாற்று உண்மையை எண்ணிப் பாராதது. வேண்டுமானால் அவர்க்குத் துணிவிருக்குமானால், சாதி வேறுபாடற்ற தமிழர் மதத்தை அவர் வேறுபிரித்துக் காட்டி அதில் மதம் மாறியவர்களைச் சேரச் சொல்லி அழைப்பு விடுத்திருக்கலாம்.

பொதுவாக, மதம் என்பது நாமெல்லாம் விதந்து பேசுமளவிற்கு அத்துணை உயர்ந்ததன்று என்றாலும், மிக வலிந்த ஒன்று, பொது மக்களைக் கட்டுப்படுத்தும் ஒரு கட்டமைப்பு. ஒரு பெரிய நம்பிக்கை