பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை ....

239


ஊஞ்சல் ஆட்டம் எல்லோருக்கும் தெரிந்த மற்றொரு விளையாட்டு. அழகிய கண்களை உடைய தோழியர் கூட்டம் ஆட்டிவிடுமாறு, கரிய பனை நாரைத் திரித்து முறுக்கிய கயிற்றை நீளமாகத் தொங்கவிட்டுக் கட்டிய ஊஞ்சல் ஒன்றை ஆட்டிக் காட்டுகிறது ஓர் அழகிய செய்யுள்.

"பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க"
                      - நற்றிணை : 90 : 6-7

பள்ளி சென்று கல்வி கல்லாத இளஞ்சிறுவர்கள், வேப்ப மரத்து அடியில், நெருங்கத் தழைத்த அதன் இலைகள் தரும், புள்ளி புள்ளியாகத் தோன்றும் நிழலில், பொற்கொல்லன் பால் உள்ள பொன்னுரைகல்போலும் வடிவில் வட்டமான அரங்கை வரைந்துகொண்டு, நெல்லிக் காய்களை வட்டுக்களாகக் கொண்டு, பாண்டில் ஆடும் அழகும் ஓரிடத்தில் கூறப்பட்டுளது.

வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன வட்டரங்கு இழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்"
             - நற்றிணை : 3 : 2 - 4

கூரை வேய்ந்த நல்ல மனைக்கு உரியவராகிய குறுந்தொடிகளை அணிந்த மகளிர், தங்கள் மனையின் முன்புறத்தில் பரப்பியிருக்கும் புதுமணலில் அமர்ந்து, கழற்சிக் காய்களைக் கொண்டு கழங்காடிக் களித்திருப்பர்.

"கூரை நன்மனைக் குறுந்தொடி மகளிர்,
மணலாடு கழங்கு".
            - நற்றிணை : 79 : 2-3

மகளிர் விளையாட்டாகப் பல இடங்களிலும் கூறப் பட்டிருப்பது ஓரை. பூஞ்சாய்க் கோரை எனும் ஒருவகைக் கோரைப் புல்லால் செய்து மகரந்தப் பொடிகள் பூசிச் செய்த பாவை வைத்து விளையாடு ஆயமொடு, ஓரை ஆடாது".