பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆருயிர் மருந்து

3


கொண்டமைதான் என்பதை உணர்ந்தார். பிறவியே துன்பத்துக்கு ஏதுவென அறிந்தார். தான் உணர்ந்ததை அறம் கேட்க வந்த மாதவிக்கும் உணர்த்தினாா்.

‘பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும்பே ரின்பம்
பற்றின் வருவது முன்னது, பின்னது
அற்றோர் உறுவது அறிக’

என்று அறத்தை உணர்த்தினார். அவர் தம் வாய் மொழி கேட்ட மாதவி மனம் மாறினவளாய்த் தவவழியிற் புக விரும்பினாள். மாதவி புத்த சமய நெறியை அறிந்து நால் வகை வாய்மைகளையும் பஞ்ச சீலத்தையும் தெளிந்து தவநெறியை மேற்கொண்டு தூய அற வாழ்வு வாழத் தொடங்கினாள். ஆம். இத்தகைய வாழ்வுக்கிடையில் மணிமேகலையும் வளர்பிறையென வளர்ந்து வருவாளாயினாள்.

கோவலன் மணிமேகலை பிறந்ததும் அவளுக்குத் தன் குல தெய்வத்தின் பெயரை வைக்கப் பணித்தான். அதே வேளையில் அவனது குல தெய்வமாகிய மணிமேகலா தெய்வம் மாதவி கனவில் சென்று 'காமன் செயலற்று ஏங்கும் வண்ணம் ஆசையை முற்றக் கெடுக்கும் தவ மாதைப் பெற்றாய் என்று சொல்லிற்று. ஆகவே தன் மகள் மணிமேகலையும் ஒரு துறவியாகவே விளங்குவாள் என்று எண்ணினாள் மாதவி. எனவே தன் மகளைத் தூய துறவற நெறியிலிருந்து மாற்ற அவள் விரும்பவில்லை. சித்திராபதி மணிமேகலையின் அழகும் அறிவும் கண்டு அவளைத் தன் வழிக்குக் கொண்டுவரின் சிறக்க வாழலாம் என நினைத்தாள். .