பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

4

ஆருயிர் மருந்து


ஆனால் மாதவியோ தூய புத்த தேவனது பீடிகை போற்றி, நல்லறம் புரியும் துறவற நெறியிலேயே மகளைச் செலுத்தினாள். மணிமேகலையும் அன்னையின் மொழிப்படி அற வாழ்வினை மேற்கொள்ள உணர்வும் உறுதியும் கொண்டு விளங்கினாள்.

மணிமேகலை இளம்பிறையென வளர்ந்து மங்கைப் பருவமுற்றாள். அவள் அழகுக்கு அவளே நிகர் எனும்படி வளர்ந்திருந்தாள். அவள் தன் தாய் சொற்படியே துறவற நெறியில் நிற்க நினைந்தாள். நாள்தோறும் புத்த தேவனைப் போற்றுவதும், அறநெறி பற்றி அறிவதும், அப்புத்தனது பாத பங்கயங்களுக்கு மலர் தொடுப்பதுமாகக் காலம் கழித்து வந்தாள்.

இந்திர விழா

இவ்வாறு காலம் கழித்து வருகின்ற நாளில் ஆண்டுதோறும் புகார் நகரில் நடைபெறுகின்ற இந்திர விழா தொடங்கும் காலம் வந்துற்றது. இந்திர விழா இந்திரனை நினைத்து அந்நகர மக்கள் கொண்டாடும் ஒரு பெருவிழாவாகும். ஒரு காலத்தில் சோழன் தூங்கெயிலெறிந்த தொடிதோட் செம்பியன் அகத்திய முனிவர் ஆணையின்படி இந்திரனை வழிபட்டுச் சிறப்புச் செய்த விழா அது. அவ்விழாவினைச் சோழ பரம்பரையினர் தவறாது ஆண்டுதோறும் இளவேனிற் காலத்துக் கொண்டாடி வந்தனர். அவ்விழாவினைச் செய்யாது விடின் நாட்டில் பல்வேறு வகைத் துன்பங்கள் உண்டாவதோடு, அந்நகரத்தையே கடல் கொள்ளும் என்று மன்னரும் மற்றவரும் கருதிவந்த காரணத்தால் ஆண்டுதோறும் அவ்விழா சிறப்பாக நடைபெற்றது. அப்பொழுது அந்த ஆண்டு விழாவும் ஆரம்பமாயிற்று.