பக்கம்:ஆறு செல்வங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ.பெ. விசுவநாதம் 39

சாதி வேற்றுமை கூறுபவர்முன் “ஒன்றே குலம்' என்பவரும், சமயவேற்றுமை கூறுபவர்முன் "ஒருவனே தேவன்' என்பவரும், இடவேற்றுமை கூறுபவர் முன் "யாதும் ஊரே என்பவரும், இன வேற்றுமை கூறுபவர் முன் "யாவரும் கேளிர் என்பவரும் அறிவுடையோராகக் காட்சி யளிப்பார், .

அறிவுடையோர் எதனையும் நன்கு ஆராய்ந்த பிறகே செய்யத் தொடங்குவர், அறிவற்றவர் ஆராயாது செய்யத் தொடங்கி விட்டுத் துன்புறுவதோடு பிறகு தமது செயலை எண்ணியும் வருந்துவர்.

அறிவுடையோர் ஒருவர்க்கு வாக்களிப்பதாயின் நன்கு ஆராய்ந்து பின்னரே வாக்களிப்பா. வாக்களித்து விட்டால் உயிர் போவதானாலும் செய்து கொடுப்பர், அறிவற்றோர் ஆராயாது வாக்களித்துவிட்டுப் பின்னால் தானும் செய்யாமல், அவரையும் செய்துகொள்ள விடாமல், தானும் துன்புற்று, அவரையும் துன்புறுத்தி வருவர்.

"அறிவாளி ஒருவன் தன்னை அறிவாளி என நினைப்பது நல்லதல்ல” என்பது ஒர் அறிவாளியின் கருத்து. 'அது தவறு: என்பது நமது கருத்து. "தன்னை, அறிவாளி' என நினைத்துக் கொள்ளும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால், மற்றவர்களை "அறிவற்றவர்கள்' எனக் கருதுவதுதான் தவறு. ஏனெனில் அறிவு உள்ளவர், அறிவு அற்றவர் என எவரையும் பிரிக்க இயலாது. ஒவ்வொருவரும் அவரவர் துறையில் சிறிது அறிவுடையவராகவே காட்சியளிப்பர். "எல்லாம் அறிந்தவரும், ஏதும் அறியாதவரும் இவ்வுலக மீது இல்லை' என்ற தாயுமானவர் வாக்கும் இதனை மெய்ப்பிக்கும். -

ஒருவரை அறிவு அற்றவர் என்பதைவிட அறிவு குறைந்தவர் என்பதே உண்மையானதாக விருக்கும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆறு_செல்வங்கள்.pdf/41&oldid=956455" இலிருந்து மீள்விக்கப்பட்டது