பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$45 ஆற்றங்கரையினிலே

முறையாகச் செய்து வந்தார் ஒரு திருத்தொண்டர். அவர் நாள்தோறும் அதிகாலையில் எழுவார்; ஆற்றிலே முழுகுவார் பூக்கூடை கொண்டு பூந் தோட்டத்திற் புகுவார்; பழுதற்ற மலர்களைப் பறிப்பார், கூடையை நிறைப்பார்; திருக்கோயிலிற் போந்து மாலை தொடுப்பார்; அதை ஈசன் திருமேனியில் அணிந்து திளைப்பார்.

இவ்வாறு நிகழ்ந்து வருகையில் ஒரு நாள் கருமலை போன்ற யானை யொன்று மதங்கொண்டு வீதியில் அவரைப் பின் தொடர்ந்தது; பூக்கூடையைப் பற்றி இழுத்தது; மலர்களை மண்ணில் சிதறி விட்டுச் சென்றது; முதியவராகிய திருத்தொண்டர் பதறி விழுந்தார்; பதை பதைத்தார்; கண்ணிர் வடித்தார்; தலையில் அடித்தார்; சிவனே சிவனே என்று ஒலமிட்டுத் துடித்தார்:

“ஆறும் மதியும் அணியும் சடைமேல்

ஏறும் மலரைக் கரிசிந் துவதோ”

என்று கதறினார். நின் திருமுடியில் ஏறுதற்குரிய நறுமலரைத் தெருவிலே சிந்தி விட்டதே செருக்குற்ற வேழம் ! என்று மனம் உருகினார்.

அந்த வேளையில் அவ்வழியாக வந்தார் எறிபத்தர் என்னும் பெரியார். அவர் ஒரு வன்தொண்டர் அடியார்க்கு அடியவர்; திருத்தொண்டர்க்குத் தீங்கிழைக்கும் தீயோரை மழுப்படையால் ஒறுப்பவர். அவர் தெருவிலே சிதறிக் கிடந்த மலர்களையும், சிவனடியார் கதறிச் சொரிந்த கண்ணிரையும் கண்டார்; சீற்றம் தலைக் கொண்டார்; மதங்கொண்ட யானையைப் பின்தொடர்ந்தார்; மழுப்படையால் அதன் துதிக்கையை அறுத்தார். கையிழந்த வேழம் கடல் போல், இரைந்து தரையில் விழுந்தது. அதுகண்டு சீறி எழுந்த பாகர் ஐவரையும் எறிபத்தர் படைக்கலத்தால் கொன்று முடித்தார்; கொலைக்களத்தில் அஞ்சாது நின்றார்.

  1. 0