பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோட்டாறு

228



சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தரும் ஆட்சி புரிந்த முந் நாடுகளிலும் தமிழ் மொழியே முன்னாளில் வழங்கிற்று. சேர மன்னரில் சிலர் செந்தமிழ்ப் புலவர்களாகவும் கவிஞர்களாகவும் விளங்கினார்கள்; வரிசையறிந்து பரிசளித்துத் தமிழ் அறிஞர்களை ஆதரித்தார்கள்.

அந்நாளில் வஞ்சி மாநகரம் சேர நாட்டின் தலைநகரம். ஆதலால் வஞ்சி வேந்தன் என்றும், வஞ்சியர் கோமான் என்றும் பெயர் பெற்றான் சேர மன்னன்.

“வாழியரோ வாழி
வருபுனல்நீர் ஆன்பொருனை
சூழ்தரும் வஞ்சியார்
கோமான்தன் தொல்குலமே”

என்று சேரன் பழங்குடியைச் சிலம்பு வாழ்த்திற்று. சேர நாட்டாரையும் வஞ்சியார் என்றழைக்கும் வழக்கமுண்டு.

முன்னொரு நாள் கடற்கரையில் இன்புற்றிருந்த ஒரு மங்கை வஞ்சி வீரன் ஒருவனை அங்கே கண்ணுற்றாள். அவன் கட்டழகு அவள் உள்ளத்தைக் கவர்ந்தது. அந்நங்கையை வீரனும் நயந்து நோக்கினான். இருவர் நெஞ்சமும் கலந்தன. இவ்வாறு காதலுற்ற நிலையில் அரசன் ஆணையால் அவ்வீரன் போர்க்களத்திற்கு அழைக்கப்பட்டான். அப்போது மனமும் முகமும் வாடிய மங்கையை நோக்கி, ‘மாசறு பொன்னே ! வலம்புரி முத்தே ! நீ வருந்தாதிரு விரைவில் வெற்றி பெற்றுத் திரும்பி வருவேன்; உன்னை மணந்து மகிழ்வேன்’ என்று உறுதி கூறினான். அவனையன்றி மற்றொருவனை மணப்பதில்லை என்று மங்கையும் வாக்களித்தாள். அன்று முதல் அவள் அல்லும் பகலும் காதலன் வரவு நோக்கிக் காத்திருந்தாள். ‘ஒல்லையில் வருவதாகச் சொல்லிச் சென்றவன் திங்கள் பலவாகியும் திரும்பி வரவில்லையே ! வஞ்சி நகரத்தான் தன்னை வஞ்சித்து அகன்றானோ’ என்று எண்ணி எண்ணி நெஞ்சம் கரைந்தாள் நங்கை.