பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

\f

ஆற்றங்கரையினிலே என்னும் இவ்வழகிய அரிய நூல் வெளியிடப்பெறுவது மிக்க மகிழ்ச்சிக்குரியது. ஆறுகளே பல்வேறு நாகரிகங்கட்கும் உறைவிடமாய் அமைந்துள்ள பான்மையை உலக வரலாறு உணர்த்தும். இவ்வுண்மையை விளக்குவது இந்நூல்.

ஆற்றங்கரையினிலே என்னும் கட்டுரைகள் தமிழ் நாட்டின் புகழ்பெற்ற வார இதழாகிய கல்கி யில் முறையாக வெளிவந்த போது தொடர்ந்து படித்து இன்புற்ற தமிழ்மக்கள் பன்னூறாயிரவர் வார இதழ்களில் தொடர்நிலைக் கதைகளைப் படிப்பவர் பேராசிரியர் சேதுப்பிள்ளை அவர்களின் ஆற்றங்கரையினிலே’ என்னும் கட்டுரைகளை வாரந்தோறும் ஆர்வமுடன் படித்துச் சுவைத்த உண்மையினை நான் அறிவேன். சிறப்பு வாய்ந்த அக் கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் வெளிவருவது தமிழ்மொழி பெற்ற பெரும்பேறே ஆகும்.

ஆற்றங்கரையினி லே’ என்னும் கட்டுரைகள் பேராசிரியர் அவர்களின் உரைநடையின் இனிமையைச் சிறப்பாகக் காட்டுகின்றன. இலக்கியச் சுவையும் வரலாற்றுச் சிறப்பும் வாய்ந்த இக்கட்டுரைகள் தொண்டை நாட்டின் பழந்தலைநகராகிய காஞ்சி மாநகரம் முதலாக ஈழ நாட்டின் புகழ்பெற்ற தலமாகிய கதிர்காமம் ஈறாக நாற்பத்தெட்டு ஊர்களின் பெருமையைப் பேசும் அருமை உடையன. சிறப்பாக உறையூர், திருச்சிராப்பள்ளி, திருவரங்கம், திருவானைக்கா பற்றிப் பேராசிரியர் அவர்கள் எழுதியுள்ள கட்டுரைகள் அவ்வூர்களோடு நெருங்கிய தொடர்புடைய எனக்குப் பேரின்பம் பயப்பனவாகும். மேலும், ஆற்றங்கரையினிலே வடநாட்டுப் பதிகளும் ஈழநாட்டுப் பதிகளும் தக்க இடம் பெறுவது தமிழ்ப் பண்பாட்டின் நீர்மைக்கு ஏற்றம் அளிப்பதாகும்.